தமிழகத்தில் மீண்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி; பிரசாரத்தில் தளவாய்சுந்தரம் பேச்சு
தமிழகத்தில் 3-வது முறையாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி என்று கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் என்.தளவாய்சுந்தரம் பேசினார்.
தீவிர பிரசாரம்
கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக தளவாய்சுந்தரம் போட்டியிடுகிறார். அவர் தேர்தல் களத்தில் பம்பரம் போல் சுழன்று வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் நேற்று அவர் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அழகப்பபுரம், பெரியவிளை, பெருமாள்புரம், கொட்டாரம், ஆறுமுகபுரம், அச்சங்குளம் உள்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.கொட்டாரத்தில் தளவாய் சுந்தரம் பொதுமக்களுடன் தரையில் அமர்ந்து கிராமசபை கூட்டம் போல் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மின்மிகை மாநிலம்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு பெண்கள் முன்னேற்றத்தில் தனி அக்கறை கொண்ட அரசு ஆகும். பெண் குழந்தைகள், மாணவிகள், தாய்மார்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மின்வெட்டு என்பதே இல்லை. அதற்கு முன்பு இருந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகமே மின்வெட்டால் இருண்டு போய் கிடந்தது. ஆனால் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சியினால் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாறியது.
ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள்
பெண்களின் நலனுக்காக இலவச கிரைண்டர், இலவச மிக்சி, இலவச மின்விசிறி போன்றவற்றை ஜெயலலிதா வழங்கினார். தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாஷிங் மெஷின் தருவதாக அறிவித்துள்ளார். இது பெண்களின் பணிச்சுமையை பெரிதும் குறைக்கும். பெண் குழந்தைகளுக்காக இலவச லேப்டாப் வழங்கியது அ.தி.மு.க. அரசு. பள்ளி செல்லும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கியது அ.தி.மு.க. அரசு. இந்தியாவிலேயே பணி செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் மானியத்துடன் வழங்கியது அ.தி.மு.க. அரசு. பொங்கல் பண்டிகைக்கு 2,500 ரூபாயும் கொரோனா நிவாரண நிதியாக 1000 ரூபாயும் வழங்கியது அ.தி.மு.க. அரசு. பெண்களின் நலனில் அதிக அக்கறை கொண்டவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தற்போது குடும்ப அட்டை வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி
அதேபோல் மாதம்தோறும் குடும்ப தலைவிகளுக்கு தலா 1500 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 3-வது முறையாக முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. எனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி தொடர நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.