உடுமலை உழவர்சந்தையில் நேற்று மீண்டும் பிரச்சினை
உடுமலை உழவர்சந்தையில் நேற்று மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதால் விவசாயிகள் 2 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலை
உடுமலை உழவர்சந்தையில் நேற்று மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதால் விவசாயிகள் 2 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உழவர் சந்தை
உடுமலை கபூர்கான் வீதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் உழவர் சந்தையின் வேளாண் அலுவலர், உழவர்சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்யும் விவசாயிகளை மரியாதை குறைவாக பேசுவதாக விவசாயிகள் கூறினர். அத்துடன் கடந்த 23 ந்தேதி ஆத்துக்கிணத்துப்பட்டியை சேர்ந்த பெண் விவசாயி கீரைகளை கொண்டு வந்து விற்பனையை தொடங்கினார்.
அவர் தாமதமாக வந்ததால் அவரை வேளாண் அலுவலர் வெளியே செல்லும்படி கூறி முககவசம் அணியும்படி கூறியதாகவும் கூறப்படுகிறது. அதற்கு அந்த பெண் விவசாயி பஸ் இல்லாததால் தாமதமானதாக கூறியுள்ளார்.
சாலை மறியல்
ஆனால் வேளாண் அலுவலர் அந்த பெண் விவசாயியை மரியாதை குறைவாக பேசியதாகவும் அந்த பெண் விவசாயி தரப்பில் கூறப்படுகிறது. அதனால் உழவர் சந்தையில் இருந்த விவசாயிகள் கடைகளில் வியாபாரத்தை நிறுத்திவிட்டு வெளியே வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து, சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத்தொடர்ந்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டுவிட்டு, வியாபாரத்தை தொடர்ந்தனர்.
இதைத்தொடர்ந்து வேளாண் விற்பனைத்துறை மற்றும் வேளாண் வணிகத்தின் கோவை துணை இயக்குனர் சுந்தரவடிவேல் உடுமலை உழவர் சந்தைக்கு வந்தார். அவரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அப்போது வேளாண் அலுவலர் கூறும்போது கீரை விற்பனை செய்யும் விவசாயிகள், உழவர் சந்தை வளாகத்தின் நுழைவுப்பகுதியில் நடைபாதையில் உட்கார்ந்து வியாபாரம் செய்கின்றனர். அதனால் அவர்களை கடைபகுதியில் உட்கார்ந்து விற்பனை செய்யும்படி கூறியதாகவும், அனைத்து விவசாயிகளும் முககவசம் அணிந்து வரவேண்டும் என்று கூறியதாகவும் அதனால் பிரச்சினை செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.
மீண்டும் போராட்டம்
இந்த நிலையில் நேற்று காலை 4 மணிக்கு உழவர் சந்தையின் கதவு திறக்கப்பட்டது. ஆனால் உழவர் சந்தைக்கு காய்கறிகளை சரக்கு வாகனம் மற்றும் வேன் ஆகியவற்றில் கொண்டு வந்திருந்த விவசாயிகள் வாகனங்களை உழவர் சந்தைக்கு முன்பு சாலைப்பகுதியிலேயே நிறுத்தி விட்டு உள்ளே வரமறுத்தனர். விவசாயிகள் தங்களுக்குள் சமரசமாக பேசி எந்த இடத்தில் கடை வைத்துக்கொள்வது என்று முடிவு செய்து கொள்கிறோம். அதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரினர். அதனால் விவசாயிகளுக்குள் பிரச்சினை வந்துவிடக்கூடும் என்றும், அதனால் அந்த கோரிக்கையை ஏற்க இயலாது என்றும் வேளாண் அலுவலர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சினை நீண்டு கொண்டே சென்றது. அதனால் அந்த பகுதி பரபரப்பிற்குள்ளானது. தகவல் கிடைத்ததும் உடுமலை போலீசார் அங்கு விரைந்து சென்று விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து காலை 6.30 மணிக்கு விவசாயிகள் காய்கறிகளை உழவர் சந்தைக்குள் கொண்டு சென்று, ஏற்கனவே கடை வைத்து நடத்திய இடத்தில் கடையை வைத்து வியாபாரம் செய்தனர்.