பூட்டிக்கிடக்கும் நூலகங்கள்

மடத்துக்குளம் பகுதியில் பூட்டிக்கிடக்கும் நூலகங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர வாசகர்கள் கோரிக்கை

Update: 2021-03-27 22:46 GMT
மடத்துக்குளம்
மடத்துக்குளம் அருகே மைவாடி ஊராட்சி பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மைவாடி ஊராட்சி பகுதியில் கடந்த 2 வருடத்திற்கும் மேலாக இப்பகுதியில் உள்ள நூலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் கோடை காலங்களில் விடுமுறையில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ  மாணவிகள் தங்களது  புத்தக வாசிப்பினை இழக்கும் அபாயநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் கடந்த காலங்களில் மடத்துக்குளம் பகுதியில் உள்ள ஊராட்சி நூலகங்கள் அனைத்திலும், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மூலம் தேர்வு செய்யப்படும் ஆட்களை பணியமர்த்தி, அதன்மூலம் நூலகத்தை பராமரிப்பு செய்து வந்தனர். ஆனால் மடத்துக்குளம் பகுதியில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளில், ஊராட்சி நூலக பராமரிப்பு செலவுகளை மேற்கொள்ள வேண்டிய காரணத்தை கருத்தில் கொண்டு,  ஊராட்சி நூலகத்தை பராமரிக்கும் பணிகளை கைவிட்டு விட்டனர். 
இதன் காரணமாக மைவாடி போன்ற ஏராளமான கிராம ஊராட்சி பகுதிகளில் தற்போது இம்மாதிரியான ஊராட்சி நூலகங்கள் பூட்டியே கிடக்கின்றன. மடத்துக்குளம் பகுதியில் திறக்கப்படாமல் உள்ள ஊராட்சி நூலகங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவந்து, இளைய தலைமுறையினர் மட்டுமின்றி, எழுத்தறிவற்ற பொதுமக்களுக்கும், அறிவை வளர்க்கும் வகையில், ஊராட்சி நூலகங்கள் செயல்பட வேண்டும் என மடத்துக்குளம் பகுதியில் உள்ள வாசகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்