100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தர்மபுரியில் மினி மாரத்தான் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்

சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தர்மபுரியில் நடந்த மினி மாரத்தான் போட்டியில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

Update: 2021-03-27 22:45 GMT
தர்மபுரி,

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நேற்று தர்மபுரியில் நடந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த போட்டியை கலெக்டர் கார்த்திகா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த மினி மாரத்தான் ஓட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய டீ சர்ட், தொப்பி, முககவசம் ஆகியவற்றை அணிந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இவர்கள் செந்தில் நகர், இலக்கியம்பட்டி, பாரதிபுரம், அரசு மருத்துவமனை, நெசவாளர் காலனி வழியாக ஓடினார்கள். இறுதியில் 4 ரோட்டில் மினி மாரத்தான் போட்டி முடிவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர், மாவட்ட விளையாட்டு அலுவலர் பியூலா ஜோன் சுசீலா, மகளிர் திட்ட அலுவலர் காமராஜ், அலுவலர்கள் கணேசன், அன்புசாமி, சிவக்குமார் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்