தாளவாடி அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்
தாளவாடி அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது.
தாளவாடி
தாளவாடி அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது.
வாழைகள் நாசம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீரை தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகிவருகிறது.
தாளவாடி அடுத்த ஆனந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 41). இவர் தன்னுடைய தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒரு யானை மோகனின் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை தின்றும், மிதித்தும் நாசம் செய்தது.
அகழி வெட்டவேண்டும்
இதைப்பார்த்த மோகன் உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள் அதிக சத்தம் எழுப்பியும், பட்டாசு வெடித்தும் சுமார் 2 மணி நேரம் போராடி யானையை காட்டுக்குள் விரட்டினார்கள். எனினும் தோட்டத்தில் 1½ ஏக்கர் பரப்பளவில் இருந்த வாழைகளை யானை சேதப்படுத்திவிட்டது.
இந்தநிலையில் அந்த பகுதி விவசாயிகள் கூறும்போது, யானைகளால் அடிக்கடி பயிர்கள் சேதமடைகின்றன. ஏற்பட்ட நஷ்டத்துக்கு வனத்துறையினர் உரிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டும். மேலும் யானைகள் காட்டை விட்டு வெளியேறாமல் இருக்க ஆழமாகவும், அகலமாகவும் வனப்பகுதியை சுற்றி அகழி வெட்டவேண்டும் என்றார்கள்.