சட்டமன்ற தேர்தல் நாளான வருகிற 6-ந்தேதி தனியார்- பொது நிறுவனங்கள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும்; கலெக்டர் கதிரவன் வேண்டுகோள்
சட்டமன்ற தேர்தல் நாளான வருகிற 6-ந்தேதி தனியார், பொது நிறுவனங்கள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கலெக்டர் கதிரவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரோடு
சட்டமன்ற தேர்தல் நாளான வருகிற 6-ந்தேதி தனியார், பொது நிறுவனங்கள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கலெக்டர் கதிரவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சம்பளத்துடன் கூடிய விடுமுறை
ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. செலவாணி முறிச்சட்டத்தின் கீழ் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் நாளான வருகிற 6-ந்தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவினை உறுதி செய்ய ஏதுவாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் தேர்தல் தினத்தன்று அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
அதன்படி தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், பீடி சுருட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட அனைத்து பணியாளர்களும் தேர்தல் தினத்தன்று தங்களது வாக்குரிமையை செலுத்திட சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும்.
தேர்தல் கட்டுப்பாட்டு அறை
தேர்தல் தினத்தன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத தொழில் நிறுவனங்கள் மீதான புகார்களை தெரிவிக்க தொழிலாளர் துறையின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி தொழிற்சாலைகளுக்கு, ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துணை இயக்குனர் க.சந்திரமோகன் (9994847205), கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட மற்ற தொழில் நிறுவனங்களுக்கு ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) டி.பாலதண்டாயுதம் (8610711278), தொழிலாளர் துணை ஆய்வாளர் சி.ப.முருகேசன் (9443566160) மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர் செ.ராஜ்குமார் (9698211509) ஆகியோரை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.