வாக்குச்சாவடிகளுக்கு 15 வகையான கொரோனா தடுப்பு உபகரணங்கள்

தஞ்சை மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 15 வகையான கொரோனா தடுப்பு உபகரணங்களை கலெக்டர் கோவிந்தராவ் நேற்று அனுப்பி வைத்தார்.

Update: 2021-03-27 21:52 GMT
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 15 வகையான கொரோனா தடுப்பு உபகரணங்களை கலெக்டர் கோவிந்தராவ் நேற்று அனுப்பி வைத்தார்.
சட்டசபை தேர்தல்
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கொரோனா தொற்றும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. எனவே கொரோனா தொற்று ஏற்படாத வகையில், வாக்காளர்கள் தேர்தல் நடைபெறும் நாளன்று அச்சமின்றி வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
அதன்படி ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் முகக்கவசங்கள், தெர்மல் ஸ்கேனர், ஒருமுறை உபயோகப்படுத்தும் கையுறை, கொரோனா கவச உடை, சர்ஜிக்கல் மாஸ்க், சானிடைசைர், பெரிய பக்கெட் என 15 வகையான பொருட்களை மொத்தமாக வாங்கி மாவட்ட அளவில் இருப்பு வைக்கப்பட்டது.
8 தொகுதிகள்
இதையடுத்து இந்த பொருட்கள் அனைத்தும் ஒரு அட்டை பெட்டியில் வைக்கப்பட்டு நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கும் தஞ்சை அண்ணா கலையரங்கத்திலிருந்து வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் கோவிந்தராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தொற்று காலமாக இருப்பதால், தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்தல் ஆணையம் இந்த பொருட்களை வழங்கியுள்ளது. அதன்படி 15 வகையான பொருட்கள் வாகனங்கள் மூலம் 8 தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்தந்த தொகுதியில் உள்ள குடோனில் இருப்பு வைக்கப்பட்டு, தேர்தல் முதல்நாள் வாக்குப்பெட்டிகளுடன் இந்த பொருட்களும் அனுப்பி வைக்கப்படும்.
2,886 வாக்குச்சாவடிகள்
கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க ஏதுவாக அவர்களுக்கு 6-ந் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கவசஉடை மற்றும் முகக்கவசம் போன்றவை அணிந்து வந்து வாக்களிக்கலாம். வாக்களித்த பின் அந்த உடைகளை உரிய பாதுகாப்போடு அதனை அகற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2,886 வாக்குச்சாவடிகளுக்கும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன், மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி ஆணையர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்