தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு தொடங்கியது

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு தொடங்கியது.;

Update: 2021-03-27 21:44 GMT
ஈரோடு
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு தொடங்கியது.
தபால் ஓட்டு
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் வாக்குச்சாவடி அதிகாரிகளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 13 ஆயிரத்து 160 பேர் ஈடுபடுகிறார்கள். அவர்கள் தபால் ஓட்டுகளை செலுத்த உள்ளனர். இதற்கான தபால் ஓட்டுச்சீட்டுகள் ஈரோடு மாவட்டத்தில் நேற்று 8 இடங்களில் நடந்த 2-ம் கட்ட பயிற்சி முகாமில் வழங்கப்பட்டன.
அதில் வாக்குச்சாவடி அதிகாரிகள் தங்களது தொகுதிக்கான ஓட்டுச்சீட்டுகளை பெற்றுக்கொண்டார்கள். மேலும், அவர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு நேற்று தொடங்கியது. எனவே பயிற்சி முகாமில் நடத்தப்பட்ட இடங்களிலேயே தபால் ஓட்டு அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
வாக்குப்பதிவு
ஓட்டுச்சீட்டுகளை பெற்றுக்கொண்ட வாக்குச்சாவடி அதிகாரிகள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்தனர். பின்னர் மறைவான இடத்தில் வைத்து தங்களது வாக்கை ஓட்டுச்சீட்டில் பதிவு செய்தார்கள். இதையடுத்து தபால் ஓட்டுகளை பெறுவதற்காக பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. அங்கு வரிசையில் நின்று அதிகாரிகள் தங்களது ஓட்டுச்சீட்டை அதில் போட்டார்கள். மேலும், தபால் ஓட்டு போடாதவர்கள் தங்களுக்கான தபால் ஓட்டுச்சீட்டை எடுத்து சென்றார்கள்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “தபால் ஓட்டுகளை போடுவதற்காக சீல் வைக்கப்பட்ட பெட்டிகள் வைக்கப்பட்டன. அந்த பெட்டிகளில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களது ஓட்டு பதிவு செய்த சீட்டுகளை போட்டனர். ஓட்டு போடாதவர்கள் தங்களது வாக்குச்சீட்டை 31-ந் தேதி நடைபெறும் அடுத்தகட்ட பயிற்சியின்போது போடலாம். மேலும், தபால் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம்”, என்றனர்.

மேலும் செய்திகள்