எங்கள் கூட்டணிக்கு வாய்ப்பு கொடுத்தால் அரசியல் களத்தில் பல விக்கெட்டுகளை வீழ்த்துவோம் - மகுடஞ்சாவடியில், சரத்குமார் பேச்சு

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தால் அரசியல் களத்தில் பல விக்கெட்டுகளை வீழ்த்துவோம் என்று மகுடஞ்சாவடியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசினார்.;

Update: 2021-03-27 21:07 GMT
இளம்பிள்ளை:
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தால் அரசியல் களத்தில் பல விக்கெட்டுகளை வீழ்த்துவோம் என்று மகுடஞ்சாவடியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசினார்.
சரத்குமார் பிரசாரம்
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி பஸ் நிறுத்தம் பகுதியில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர் செங்கோடனை ஆதரித்து திறந்த வேனில் நின்று பேசினார். 
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் கடந்த 53 ஆண்டுகளை கடந்து திராவிட கட்சிகள் ஆட்சி புரிகின்ற நிலையில் மக்களின் நிலை, தமிழகத்தின் நிலை எப்படி இருக்கிறது. இன்றைக்கும் தேர்தல் வந்தால் ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள் என்ற எண்ணம் தான் நிலவுகிறது என்று சொன்னால் மக்கள் பொருளாதார அடிப்படையில் உயரவில்லை என்று தான் அர்த்தம். மக்கள் பொருளாதார அடிப்படையில் உயர்ந்து இருந்தால் ஓட்டுக்கு எதற்கு காசு வாங்க போகிறார்கள். 
எளியோருக்கும் வாய்ப்பு
கண்டிப்பாக வாங்க மாட்டார்கள். ஏனென்றால் சொந்த காலில் நிற்கும் போது எதற்காக மற்றவர்களின் பணம் என்று உதாசீனப்படுத்தி இருப்பார்கள். எனவே எளியோருக்கும் வாய்ப்பு என்ற நிலை வரும்போது பணம் இல்லாத அரசியல் களம் அமையும். அது உண்மையான ஜனநாயகமாக இருக்க முடியும்.
 நாங்கள் தேர்ந்தெடுத்துள்ள வேட்பாளர்கள் மக்களுக்கு உழைப்பவர்கள். சாதாரணமாக இருந்து உழைத்து முன்னேறி மக்களின் தேவையை உணர்ந்து செயல்பட்டு கொண்டு இருப்பவர்களை தான் நாங்கள் வேட்பாளராக அறிமுகப்படுத்தி உள்ளோம். 
அரசியலில் நடிக்க தெரியாது
இன்றைக்கு 70 ஆண்டுகளுக்கு மேல் சுதந்திரம் பெற்று நம் நாட்டில் கிராமத்துக்கு சென்றால் சாக்கடை இன்னும் தெருவில் தான் ஓடுகிறது. 53 ஆண்டுகள் என்ன செய்தீர்கள்?  நடிகர் என்றால் எல்லோரும் ஏளனமாக பார்க்கிறார்கள். ஆனால் எல்லோரும் நடிகர்களை வைத்து பிரசாரம் செய்து கொள்வார்கள். 
அரசியலில் எங்களுக்கு நடிக்க தெரியாது. அரசியலில் உண்மையாக உழைக்க தான் தெரியும். உழைப்பவர்கள் ஒன்று சேர்ந்து இருக்கிறோம். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கிறோம். அதனால் தான் எல்லா இடங்களிலும் கிரிக்கெட் வீரர் சேலம் நடராஜன் பெயரை எடுத்துக்காட்டாக கூறி வருகிறேன். கிரிக்கெட் வீரர் நடராஜனை ஒரு ஆண்டுக்கு முன்பு எவ்வளவு பேருக்கு தெரியும். திறமையான வேகப்பந்து வீச்சாளர். ஆனால் அவரை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வரை உலகத்திற்கே தெரியாது. 
பல விக்கெட்டுகளை வீழ்த்துவோம்
தமிழ்நாடு, இந்திய பிரிமீயர் லீக்கில் விளையாடி கொண்டிருந்தார். திடீரென இந்திய அணியில் ஆட ஒரு வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தினார், திறமையை வெளிப்படுத்தினார், விக்கெட்டுகளை வீழ்த்தினார். அப்படி ஒரு வாய்ப்பை நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் என்ற அரசியல் களத்தில் எங்கள் கூட்டணிக்கு மக்கள் கொடுத்தால், நாங்கள் பல விக்கெட்டுகளை வீழ்த்துவோம். எனவே இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு அளியுங்கள்.
இவ்வாறு சரத்குமார் பேசினார்.
இதைத்தொடர்ந்து சங்ககிரிக்கு சென்ற சரத்குமார், புதிய எடப்பாடி ரோட்டில் நேற்று இரவு 8.20 மணி அளவில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார்.
முன்னதாக ஆத்தூர் தொகுதி சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் ஏ.கே.சிவகுமாரை ஆதரித்து ஆத்தூர் பழைய பஸ் நிலையம் அருகே சரத்குமார் பிரசாரம் செய்தார்.

மேலும் செய்திகள்