ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா

5 மாதங்களுக்கு பிறகு ஒரே நாளில் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்றால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2021-03-27 20:41 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை தினசரி பாதிப்பு 10-ஐ தாண்டவில்லை. ஆனால் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 15, 20 என உயர்ந்து, நேற்று அதிகபட்சமாக 43-ஐ எட்டியது.
கடந்த 5 மாதங்களுக்கு பிறகு நேற்று தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40-ஐ தாண்டியுள்ளது. அதாவது கடைசியாக கடந்த நவம்பர் 18-ந் தேதி கொரோனாவால் 45 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன் பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கடந்த 3 மாதமாக ஒற்றை இலக்கத்தில் தான் இருந்து வந்தது. அதன் பிறகு தற்போது தான் மீண்டும் உயர தொடங்கியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிப்பு

மேலும் நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 25 ஆயிரத்து 479 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதன் மூலம், மொத்த பாதிப்பு 25 ஆயிரத்து 522 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இது தவிர 257 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு இன்னும் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்