வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது
நெல்லை மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது.
நெல்லை, மார்ச்:
நெல்லை மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சின்னம் பொருத்தும் பணி
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை என 5 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. மேற்கண்ட தொகுதிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் அந்தந்த தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 1,924 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட வாக்குச்சாவடிகளுக்கு 2,763 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், 2311 கட்டுப்பாட்டு எந்திரம், 2562 விவிபேட் இயந்திரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை சட்டசபை தொகுதியில் 14 வேட்பாளர்களும், பாளையங்கோட்டை தொகுதியில் 10 வேட்பாளர்களும், அம்பை தொகுதியில் 12 வேட்பாளர்களும், நாங்குநேரி தொகுதியில் 15 வேட்பாளர்களும், ராதாபுரம் தொகுதியில் 25 வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். ராதாபுரம் தொகுதியில் மட்டும் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள தாலுகா அலுவலங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செல்வன் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடந்தது.
கலெக்டர் ஆய்வு
இந்த பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் சின்னம் பொருத்தும் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஷ்ணு நேற்று ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் பார்வையாளர்கள் டாக்டர் சுப்ரதா குப்தா, சுரேந்திர நாராயண பாண்டே, நுன்சவத்திருமலை நாயக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.