திருமேனி நாதர் கோவில் பங்குனி தேரோட்டம்
திருச்சுழி திருமேனி நாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
காரியாபட்டி,
திருச்சுழி திருமேனி நாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கொடியேற்றம்
திருச்சுழியில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டதும், பாண்டிய ஸ்தலங்கள் 14-ல் பத்தாவது ஸ்தலமாக விளங்குகிறது திருமேனிநாதர் ேகாவில்.
இந்த கோவிலில் பங்குனி தேரோட்ட திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அதேபோல இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தேரோட்டம்
இதனைத்தொடர்ந்து துணை மாலையம்மனுக்கும், திருமேனிநாதருக்கும் தினமும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன.
விழாவையொட்டி காலை மற்றும் மாலை நேரங்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அம்மன், பச்சை பட்டு உடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சாமி தரிசனம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெற வில்லை. ஆதலால் இந்த ஆண்டு பங்குனித்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.