வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்

தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-03-27 19:02 GMT
கடலூர், 

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் நேற்று இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்றது. இதில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி அலுவலர்களுக்கு வடலூர் வள்ளலார் குருகுல மேல்நிலைப்பள்ளியில் 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

கலெக்டர் ஆய்வு

இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், கடந்த 21.3.2021 அன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இன்று (அதாவது நேற்று) அனைத்து மண்டல அலுவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளுவது குறித்து இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு 9 சட்டமன்ற தொகுதிகளிலும் மண்டல அலுவலர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.

14,404 அலுவலர்கள்

அதாவது திட்டக்குடி (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,464 அலுவலர்களுக்கும், விருத்தாசலம் தொகுதியில் 1,704 அலுவலர்களுக்கும், நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் 1,436 அலுவலர்களுக்கும், பண்ருட்டி தொகுதியில் 1,636 அலுவலர்களுக்கும், கடலூர் தொகுதியில் 1,648 அலுவலர்களுக்கும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் 1,612 அலுவலர்களுக்கும், புவனகிரி தொகுதியில் 1,680 அலுவலர்களுக்கும், சிதம்பரம் தொகுதியில் 1,700 அலுவலர்களுக்கும், காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் 1,524 அலுவலர்களுக்கும் என மொத்தம் 14,404 அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி

தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் அனைவரும் நடுநிலையாக பணியாற்ற வேண்டும். தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அனைத்து பயிற்சி மையங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொண்டு, பாதுகாப்பாக பணியாற்றிட வேண்டும் என்றார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் மகேந்திரன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் லூர்துசாமி, ஜெயக்குமார், உதவி தேர்தல் அலுவலர் அரங்கநாதன், தாசில்தார் ராமதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்