கோவில்களில் தேரோட்டம்

குன்றக்குடி, திருப்புவனம், உருவாட்டி, சிவகங்கை கோவில்களில் நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்..

Update: 2021-03-27 18:58 GMT
காரைக்குடி,

குன்றக்குடி, திருப்புவனம், உருவாட்டி, சிவகங்கை கோவில்களில் நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்..

குன்றக்குடி

காரைக்குடி அருகே பிரசித்தி பெற்ற குன்றக்குடி சண்முகநாதபெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 18-ந்தேதி அனுக்கை, விக்னேஷ்வர பூஜை மற்றும் வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. மறுநாள் 19-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் கொடியேற்றம் நடந்தது.
விழாவையொட்டி தினந்தோறும் இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கடந்த 25-ந்தேதி இரவு தங்க ரத புறப்பாடு நடந்தது.. 9-வது திருநாளான நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக உற்சவர் சண்முகநாத பெருமாள் வள்ளி, தெய்வானையுடன் காலையில் தேரில் எழுந்தருளினார்.
 மாலை 4.30 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திருத்தேர் கோவில் மலையை சுற்றி 4 ரத வீதிகள் வழியாக வந்து மாலை 5.40 மணிக்கு நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று(ஞாயிற்றுக்கிழமை) பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.

திருப்புவனம்

திருப்புவனத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட புஷ்பவனேசுவரர்- சவுந்திரநாயகி கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சுவாமி -அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் புஷ்பவனேசுவரரும், மற்றொரு தேரில் சவுந்திரநாயகி அம்மனும் எழுந்தருளினார்கள். காலை 9.15 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் திருப்புவனம் கீழ ரத வீதி, மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலை, சந்தை திடல், மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, வழியாக மதியம் 12 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
தேரோட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின்பேரில் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருப்புவனம் கோவில் சூப்பிரண்டு செந்தில்குமார், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

உருவாட்டி

காளையார்கோவில் அருகே உருவாட்டியில் பிரசித்தி பெற்ற சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 19-ந்தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.. நேற்று முன்தினம் இரவு தீச்சட்டி, பால்குடம், கரும்புத் தொட்டில் எடுத்து பொதுமக்கள் அம்மனை வழிபட்டனர்.அதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேர் ஆடி அசைந்து வந்தது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

சிவகங்கை

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான விசுவநாத சுவாமி கோவிலில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு பங்குனி உத்திர திருவிழா கடந்த 19-ந் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. கடந்த 26-ந்தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. மாலை 5 மணிக்கு புறப்பட்ட திருத்தேர் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்தது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின்பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்