நலிவடைந்து வரும் செங்கல் தயாரிக்கும் பணி
திருவாரூர் மாவட்டத்தில் செங்கல் தயாரிக்கும் பணி நலிவடைந்து வருகிறது. எனவே நிபந்தனையின்றி மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரி க்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் செங்கல் தயாரிக்கும் பணி நலிவடைந்து வருகிறது. எனவே நிபந்தனையின்றி மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரி க்கை விடுத்துள்ளனர்.
குறுவை, சம்பா சாகுபடி
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா மாவட்டங்கள் திகழ்கிறது. இதில் திருவாரூர் மாவட்டம் உணவு உற்பத்தியில் முதன்மை இடத்தை பிடிக்கின்றது. காவிரி தண்ணீரை மட்டுமே நம்பி சாகுபடி நடைபெறுவதால் குறுவை, சம்பா சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது. கோடை சாகுபடி கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருகிறது. இதனால் மாற்று தொழிலில் ஈடுபடும் நிலை இருந்து வருகிறது.
தயாரிப்புக்கு ஏற்ற மண்வளம்
விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறி வருவதால் வீடு கட்டுமான பணிகளில் மூலதனமான செங்கல் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் கோடைக்காலத்தில் வருவாய் தரும் செங்கல் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர், அம்மையப்பன், புதுக்குடி, வலங்கைமான் போன்ற பகுதிகளில் களி மண்ணுடன், மணல் கலந்து செங்கல் தயாரிப்பதற்கு ஏற்ற மண் வளம் உள்ளது.
இதன் காரணமாக தலைமுறைகளாக செங்கல் தயாரிப்பு தொழிலில் தொடர்ந்து ஈடு்பட்டு வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள் தை மாதம் அறுவடை முடிவடைந்த பின்னர் ஜூன் மாதத்திற்கு மேல் தான் குறுவையை தொடங்குகின்றனர்.
விவசாயிகள் ஆர்வம்
இந்த 5 மாதங்கள் தண்ணீர் பிரச்சினை காரணமாக எந்தவித வருவாயும் ஈட்ட முடியாத நிலை ஏற்படுகிறது. கோடைக்காலத்தில் வருவாய் ஈட்டிட செங்கல் தயாரிப்பு பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து திருவாரூர் அருகே சூரனூர் பகுதியை சேர்ந்த செங்கல் காலவாய் உரிமையாளர் மோகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோடைக்காலங்களில் தண்ணீர் பிரச்சினையால் விவசாயத்திற்கு மாற்றாக செங்கல் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய்த்துறை மூலம் மண் எடுப்பதற்கு பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் செங்கல் தயாரிப்பு தொழில் சற்று நலிவடைந்துள்ளது. இதனால் சொந்த இடத்திலும், வெளி இடத்தில் இருந்தும் மண் எடுப்பதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் மாற்று தொழிலான செங்கல் தயாரிப்பு பணி நலிவடைந்து வருகிறது.
நிபந்தனையின்றி மண் எடுக்க அனுமதி
எனவே சொந்த இடத்தில் செங்கல் தயாரிப்பதற்கு எந்தவித நிபந்தனையின்றி மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கிடவேண்டும். காலவாயில் ஆயிரம் கல் ரூ.7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதன் தேவையும் அதிகரித்துள்ள நிலையில் செங்கல் தயாரிப்பில் செலவு அதிகரித்து கொண்டே செல்கிறது. மண் தட்டுப்பாட்டு காரணமாக செங்கல் விற்பனை மந்தமாக இருந்து வருகிறது. எனவே தமிழக அரசு மண் எடுப்பதற்கு உரிய அனுமதி வழங்கி செங்கல் உற்பத்தி செய்யும் விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இ்வ்வாறு அவர் கூறினார்.