100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்
தூத்துக்குடியில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 100 திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் மூலம் ‘சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம்’ என்ற விழிப்புணர்வு பிரசாரம் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். விழிப்புணர்வு பேரணி மற்றும் 1 லட்சம் தபால் அட்டைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இன்று (அதாவது நேற்று) மாநகராட்சியின் சார்பில் 100 திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் மூலம், சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த பிரசார வாகனங்களில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும், ஏப்ரல் 6-ந் தேதி மறக்காமல் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே வாக்காளர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.