ஆண்டிப்பட்டி அருகே அரசு பஸ் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்

ஆண்டிப்பட்டி அருகே அரசு பஸ் மோதி வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 13 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-03-27 16:57 GMT
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள எஸ்.ரெங்கநாதபுரம் விலக்கு பகுதியில் தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் வேனில் வேலைக்கு செல்வது வழக்கம். 
அதன்படி, நேற்று காலை ஆண்டிப்பட்டி பகுதியில் இருந்து 20 பெண்களை ஏற்றிக்கொண்டு நூற்பாலை நோக்கி ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. எஸ்.ரெங்கநாதபுரம் விலக்கு அருகே அந்த வேன் வந்தபோது, பின்னால் மதுரையில் இருந்து கம்பம் நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடியதுடன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. 
இந்த விபத்தில் வேனில் சென்ற 13 பெண்கள் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். இதையடுத்து காயமடைந்த அனைவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்