மாற்றுத்திறனாளிகள், 80 வயதை கடந்தோருக்கு திருவள்ளூர் தொகுதியில் தபால் ஓட்டு அளிக்க வசதியாக நடமாடும் 3 குழுக்கள்

திருவள்ளூர் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள், 80 வயதை கடந்தோர் தபால் ஓட்டு அளிக்க வசதியாக நடமாடும் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் படிவங்களை வழங்கி வழியனுப்பி வைத்தார்.;

Update:2021-03-27 21:58 IST
திருவள்ளூர், 

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் வரலாற்றில் முதன்முறையாக இத்தேர்தலில் வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க முடியாத 80 வயதை கடந்த முதி யோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுகள் மூலம் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

அதைத்தொடர்ந்து திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் 80 வயதை கடந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வருகிற 5-ந்தேதி வரை தங்களது தபால் வாக்கினை பதிவு செய்வதற்கு ஏதுவாக திருவள்ளூரில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் நடமாடும் 3 மண்டல குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த குழுக்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று படிவங்களை வழங்கி வாக்குகளை பெற்று வருவர். இந்த குழுக்களுக்கான படிவங்களை வழங்கும் நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பா.பொன்னையா கலந்து கொண்டு படிவங்களை வழங்கி வழியனுப்பி வைத்தார்.

நிகழ்வின் போது, திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மதுசூதனன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்