ஆவடி தொகுதி மக்களுக்கு “சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க 100 இடங்களில் தண்ணீர் ஏ.டி.எம்.” அ.தி.மு.க. வேட்பாளர் பாண்டியராஜன் உறுதி
ஆவடி தொகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க 100 இடங்களில் தண்ணீர் ஏ.டி.எம். அமைக்கப்படும் என்று அ.தி.மு.க. வேட்பாளர் பாண்டியராஜன் உறுதி அளித்தார்.;
சென்னை,
ஆவடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், அமைச்சருமான க.பாண்டியராஜன் அந்த தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று காலை அவர், காமராஜர் நகர் 4-வது தெரு, ஐயப்பன் நகர், சாய்பாபா கோவில், பிள்ளையார் கோவில், கருணாநிதி 2-வது தெரு, வள்ளலார் தெரு, பவானி அம்மன் தெரு, அருணகிரிநாதர் தெரு, திருவள்ளுவர் நகர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த பிரசாரத்தின்போது அவருடன் அ.தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும், காமராஜர் நகர் பகுதி அ.தி.மு.க. செயலாளர் தீனதயாளன், வட்ட செயலாளர்கள் குப்பன், கேபிள் ஆனந்த், வள்ளி சண்முகம் ஆகியோர் உடன் சென்றனர்.
இந்த பிரசாரத்தின்போது, அந்தந்த பகுதியில் கூடிருந்த மக்களிடம் கடந்த காலத்தில் தான் செய்த திட்டப்பணிகளை விளக்கிக்கூறி அவர்களிடம் க.பாண்டியராஜன் வாக்கு கேட்டார்.
தன்னை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு அங்கு கூடியிருந்த மக்களிடம் கேட்டுக்கொண்ட அவர், வரும் 5 ஆண்டுகளில் செய்ய உள்ள பணிகள் குறித்தும் அந்த மக்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.
ரூ.100 கோடி மதிப்பீட்டில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகாமல் இருப்பதற்கும், நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கவும் ஆவடியில் உள்ள முக்கிய 6 ஏரிகளை இணைத்து தொகுதி நீர்வளம் பாதுகாக்கப்படும். ஆவடி சட்டமன்ற தொகுதியில் 100 இடங்களில் தனியார் பங்களிப்புடன் தண்ணீர் ஏ.டி.எம்.கள் அமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.
ஆவடி தொகுதியில் உள்ள கோவில் குளங்கள் மற்றும் சிறு குளங்கள் தூர்வாரி நிலத்தடி நீர் சேகரிக்கும் ஆதாரமாக உருமாற்றப்படும். ஆவடியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்வதற்கு புதிய ரெயில் வழித்தடம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். ஆவடி சட்டமன்ற தொகுதியில் தனியாக காவல் போக்குவரத்து பிரிவு ஏற்படுத்தப்படும். ஆவடி சட்டமன்ற தொகுதி முழுவதும் மின்வழித்தடங்கள் படிப்படியாக பூமிக்கு அடியில் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
ஆவடி மாநகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 10 இடங்களில் இ-பைக் வசதி செய்து தரப்படும். ஆவடி மக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்திசெய்ய "My AvadiApp" நவீனப்படுத்தப்பட்டு, சீராக இயங்கிட வழிவகை செய்யப்படும்.
தொகுதி மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது உறுதி செய்யப்படும். தொகுதியில் 6 இடங்களில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய அரசு மற்றும் தனியார் சேவைகளை பெறுவதற்கு இணைய வழி சேவை மையங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக அமைத்துத் தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.