சென்னை சவுகார்பேட்டையில் நகை கடையில் ரூ.1½ கோடி ஹவாலா பணம் பறிமுதல் வருமானவரித்துறை அதிரடி

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகை கடையில் சோதனை நடத்திய வருமான வரி அதிகாரிகள், அங்கு கணக்கில் வராத ஹவாலா பணம் ரூ.1½ கோடியை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-27 11:39 GMT
பெரம்பூர், 

சென்னை பாரிமுனை மற்றும் சவுகார்பேட்டை பகுதியில் உள்ள நகை கடைகளில் கணக்கில் வராத ஹவாலா பணம் பதுக்கி வைத்து இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராதாகிருஷ்ணன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு சவுகார்பேட்டை பகுதியில் உள்ள நகை கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சவுகார்பேட்டை என்.எஸ்.சி. போஸ் சாலையில உள்ள ஒரு நகை கடையில் சுமார் 5 மணி நேரம் சோதனை நடத்தினர். அதில் அந்த நகை கடையில் கணக்கில் வராத ஹவாலா பணம் ரூ.1 கோடியே 50 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பணத்தை கைப்பற்றிய வருமான வரித்துறை அதிகாரிகள், அந்த பணம் யாருடையது? எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? எதற்காக நகை கடையில் பதுக்கி வைத்து இருந்தனர்? தேர்தல் செலவுக்கு வேட்பாளருக்கு கொடுக்க வைத்திருந்தனரா? அல்லது வாக்காளர்களுக்கு வழங்க அரசியல் கட்சிகள் யாராவது கொடுத்து வைத்து இருந்தனரா? என பல்வேறு கோணங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்