உங்கள் வீட்டுப்பிள்ளைக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்; அமைச்சர் விஜயபாஸ்கர் மகள் அனன்யா பிரசாரம்
உங்கள் வீட்டுப்பிள்ளைக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கரின் மகள் அனன்யா பிரசாரத்தில் ஈடுபட்டார்.
நடிகை விந்தியா பிரசாரம்
விராலிமலை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரை ஆதரித்து நடிகை விந்தியா விராலிமலை செக்போஸ்டில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பேசினார்.
அப்போது, அவர் பேசியதாவது:-
விராலிமலை முருகன் பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை கொடுப்பார். இந்த தொகுதிக்காக முருகன் கொடுத்த பிள்ளைதான் இந்த விஜயபாஸ்கர். அவருக்கு ஜெயலலிதா அஞ்சாமை ஆளுமை, நல்ல குணம், அன்புகாட்டவும் கற்றுக் கொடுத்துள்ளார். உலகையே அச்சுறுத்திய கொரோனா காலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் இல்லாவிட்டால் தமிழ்நாடு சுடுகாடாக மாறி இருக்கும். கொரோனா என்னும் அரக்கனை தடுத்து நிறுத்திய முதல் தடுப்பூசி அமைச்சர் விஜயபாஸ்கர். எனவே அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் வீட்டுப்பிள்ளை
தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரின் இளைய மகள் அனன்யா பேசும்போது, எனது தந்தை உங்களுக்காக தான் தினமும் உழைத்து கொண்டிருக்கிறார். உங்களுக்கு ஏதாவது என்றால் அவர் துடித்துப் போய் விடுவார். காது கேட்கவில்லை என்றால் காது மெஷினாக வருவார். கண் தெரியவில்லை என்றால் கண்ணாடியாக வருவார். கொரோனா என்றால் மருந்தாக வருவார். பொங்கல் என்றால் சீராக சிறப்பாக வருவார். அவரை எனது அப்பா என்று சொல்வதைவிட, அவர் உங்கள் வீட்டுப்பிள்ளை. எனவே அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.
தொடர்ந்து விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதிக்குட்பட்ட லெக்கனாப்பட்டி, ஒடுக்கூர், மேலப்புதுவயல், குளத்தூர் ஆகிய ஊராட்சியை சேர்ந்த கிராமங்களில் தனது மகளுடன் சென்று பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.