ஒட்டன்சத்திரம் தொகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்படும்; அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. பேச்சு

ஒட்டன்சத்திரம் தொகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி வீடு கட்டித்தரப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

Update: 2021-03-27 06:00 GMT
தி.மு.க.வேட்பாளர் அர.சக்கரபாணி திறந்த ஜீப்பில் நின்றவாறு பிரசாரம் செய்த காட்சி.
6வது முறையாக...
ஒட்டன்சத்திரம் தி.மு.க. தொகுதி வேட்பாளராக தற்போதைய எம்.எல்.ஏ.வும், தி.மு.க. கொறடாவுமான அர.சக்கரபாணி போட்டியிடுகிறார். நேற்று அவர் ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றியம் குத்திலிபை, ஐ.வாடிப்பட்டி, கே.கீரனூர், வெள்ளியம்வலசு, பெரியமண்டவாடி, சின்னமண்டவாடி, ரோட்டுபுதூர், கொங்கபட்டி ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். 

அப்போது அவர் பொதுமக்களிடையே பேசியதாவது:
கடந்த ஐந்து முறை என்னை வெற்றி பெறச் செய்ததற்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து 6வது முறையாக என்னை வெற்றி பெற செய்ய உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். கடந்த ஆட்சிக்காலத்தில் சின்னயகவுண்டன்வலசில் இருந்து கீரனூர் வரை சாலை விரிவுபடுத்தப்பட்டது. சுமார் ரூ.150 கோடியில் 10 கிலோமீட்டர் ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. தொகுதி முழுவதும் 100க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய பாலங்கள் அமைக்கப்பட்டது என பல்வேறு திட்ட பணிகள் நிறைவேறி உள்ளது.

இலவச வீடுகள்
மேலும் ஒட்டன்சத்திரம் பகுதியில் 12 கூட்டுறவு சங்கங்களுக்கு நவீன கட்டிடம், ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், நகரில் புதிய கிராம நிர்வாக அலுவலக கட்டிடம், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் கொண்டு வரப்பட்டது இப்படி எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ஒட்டன்சத்திரம் தொகுதியில் அரசு பணிக்கு பயிலும் மாணவமாணவிகளுக்கு அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படும். விவசாயிகள் எங்கெல்லாம் தடுப்பணை கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்களோ, அங்கெல்லாம் தடுப்பணை கட்டித்தரப்படும். ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய பகுதிகளில் வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும். குறுவட்டங்கள் தோறும் நவீன வசதியுடன் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் அமைத்து தரப்படும். அதேபோல் தி.மு.க. வாக்குறுதிகளான மகளிருக்கு நகர பஸ்களில் இலவச பயண வசதி, கிராமங்களில் வீட்டுக்கு இலவச குடிநீர் இணைப்பு, மகளிர் சுயஉதவி குழுவினர் பெற்ற கூட்டுறவு கடன்கள் ரத்து என எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்ற வரும் சட்டமன்ற தேர்தலில் எனக்கு வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்அமைச்சர் ஆவது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்