மக்களுக்கான நல்லாட்சி தொடர்ந்திட அ.தி.மு.க.விற்கு ஆதரவு தாருங்கள்; அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேச்சு
திருச்சி கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் நேற்று கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 8-வது வார்டில் உள்ள செல்வ மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
அப்போது அவருக்கு மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் பெண்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.தொடர்ந்து ஜான்தோப்பு, தேவதானம், கீழ தேவதானம், டவுன்ஸ்டேஷன் ரோடு, சஞ்சீவிநகர், சிந்தாமணி பூசாரித்தெரு, பதுவைநகர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகளும் நூற்றுக்கணக்கான பெண்களும், ஆண்களும் தங்களுடன் வீடு, வீடாக வேட்பாளரை நடந்தே அழைத்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன், நான் இந்த தொகுதியிலேயே பிறந்து வளர்ந்தவன், வெளியூர்க்காரன் இல்லை. உங்களில் ஒருவனாக இருந்து உங்களுக்காக சேவையாற்றுவேன். என்றும் மக்கள் நலபணியில் தொடர்ந்து ஈடுபடுவேன். மக்களுக்கான நல்லாட்சி தொடந்திடவும், அரசின் அனைத்து நல திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தவும், தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் 100 சதவீதம் நிறைவேற்றி தரவும் பொதுமக்களாகிய நீங்கள் என்றும் அ.தி.மு.க. அரசுக்கும், தொகுதி வேட்பாளராகிய எனக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அவருடன் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணைச்செயலாளர் சீனிவாசன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், ஏர்போர்ட் விஜி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு, வட்ட செயலாளர்கள் பொன்.அகிலாண்டம், ராஜ்மோகன், நிர்வாகிகள் குவைத்மனோகரன், பிளாட்டோ, கணேசன், சந்துரு, ரஜினி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் மகேந்திரன், கே.டி.தனபால், சரவணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.