அரசு கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கப்படும்; தஞ்சை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி வாக்குறுதி
அரசு கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கப்படும் என தஞ்சை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி வாக்குறுதி அளித்தார்.
அ.தி.மு.க. வேட்பாளர்
தஞ்சை சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தஞ்சை தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு பகுதிகளுக்கும் நேரில் சென்று இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று கொடிக்காலூர், தஞ்சை கீழவாசல் சாலைக்காரதெரு, குயவர் தெரு, டவுன் கரம்பை மற்றும் 11, 12, 13 ஆகிய வார்டுகளில் வீதி, வீதியாக திறந்த ஜீப்பில் சென்றும், பல இடங்களில் வீடு, வீடாக நடந்து சென்றும் அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.அப்போது பெண்கள் ஏராளமானோர் அவருக்கு ஆரத்தி
எடுத்தும், மலர்தூவியும் வரவேற்றனர். கட்சி நிர்வாகிகள் ஆளுயர மாலையை அணிவித்து வரவேற்பு அளித்தனர். மாலையில் 7, 8, 9, 10 ஆகிய வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரசாரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி வாக்குறுதியாக பேசியதாவது:-
6 சிலிண்டர்கள் இலவசம்
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் ரூ.1,500 வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் உங்கள் வீடு தேடி வரும். வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் கிரைண்டர், மிக்சி, மின்விசிறி வழங்கியது போல, தற்போது விலையில்லா வாஷிங்மெஷின் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.சமூக ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஆண் வாரிசால் புறக்கணிக்கப்பட்ட முதியோருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். மேலும், முதியோர், விதவைப்பெண்கள், முதிர்கன்னிகள்,
கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும்.
சீர்வரிசை பரிசு
குடியிருப்பதற்கு சொந்தவீடு இல்லாதவர்களுக்கு, கிராமப்புறங்களில் அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். நகர் பகுதிகளில் அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி அம்மா இல்லம் திட்டம் மூலமாக விலையில்லாமல் வழங்கப்படும். திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், ஏழை மணமக்களுக்கு அழகிய பட்டாடை, வெள்ளிக் கொலுசு, வீட்டு உபயோக பொருட்கள் உள்பட அம்மா சீர்வரிசை பரிசு வழங்கப்படும்.அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு இரண்டு சக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்படும். போட்டித்தேர்வுகளில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை
மாணவர்கள் வெற்றி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், உயர்தர பயிற்சி மையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படும். நுகர்வோர்களின் நலன் கருதி பால் விற்பனை விலை ரூ.2 குறைக்கப்படும். ஆட்டோ ஓட்டுநர் உரிமம் பெற்ற ஆண், பெண் ஓட்டுநர்களின் வளமான வாழ்விற்கு ரூ.25 ஆயிரம் மானிய விலையில் எம்.ஜி.ஆர் பசுமை ஆட்டோ வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வேட்பாளருடன் காவேரி சிறப்பு அங்காடி தலைவர் பண்டரிநாதன், கரந்தை பகுதி துணைச் செயலாளர் தாஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் சென்று இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
வெள்ளாளர் சங்கம் ஆதரவு
தஞ்சை நகர சோழிய வெள்ளாளர் சங்கம் மற்றும் அனைத்து வெள்ளாளர் சங்க நிர்வாகிகள் இளங்கோவன், சந்திரசேகரன், மாணிக்கம், செல்வம், மனோஜ், ரமேஷ், செந்தில்.தியாகராஜன் ஆகியோர் தஞ்சை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பியை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். அப்போது மாவட்ட அ.தி.மு.க. இளைஞரணி செயலாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், கோட்டை பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் பூபதி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.