தற்போதைய தேர்தல் தத்துவப் போராகும்; விழிப்புடன் வாக்களிக்க வேண்டுகிறேன்; முன்னாள் மத்திய மந்திரி ப .சிதம்பரம் எம்.பி. பேச்சு

காரைக்குடி மகபூப்பாளையம் பள்ளிவாசலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாங்குடிக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜமாத் தலைவர் ஷேக் தாவூத் தலைமை தாங்கினார்.

Update: 2021-03-27 00:00 GMT
பீர்முகமது முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சிறப்பு உரையாற்றி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, குஜராத் மாநில சட்டமன்றத்தில் 182 இடங்கள் உள்ளன. அம்மாநில மக்களில் 14 பேருக்கு ஒருவர் முஸ்லிம். ஆனால். ஒருவருக்குகூட போட்டியிட பாரதிய ஜனதா வாய்ப்பு தரவில்லை. உத்தரபிரதேச மாநிலத்தில் 402 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன அம்மாநில மக்களில் 5 பேரில் ஒருவர் முஸ்லிம். ஆனால் கடந்த 2 தேர்தல்களில் ஒருவருக்குக்கூட பாரதிய ஜனதா வாய்ப்பு அளிக்கவில்லை. உங்கள் ஓட்டு எங்களுக்கு தேவையில்லை என்று 
சொல்வதை கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் உங்களுக்கு பணியாற்றும் கடமை எங்களுக்கு இல்லை என்று கூறுவதை ஜீரணிக்க முடியாது. 2019-ல் பெரும்பான்மையோடு பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் பொருளாதாரத்தில், கட்டமைப்புகளில், எளிய மக்களின் வாழ்வாதாரத்தில், கல்வி மேம்பாட்டில், மருத்துவ வசதியில் அக்கறை செலுத்தவில்லை. முதலில் செய்த காரியம் சிறுபான்மை மக்களுக்கு எதிரானது தான். சுதந்திர இந்தியாவில் விரும்பி சேர்ந்த மாநிலங்களை பிரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் சட்டப்படி வாய்ப்பில்லை. ஜம்மு காஷ்மீரை இரண்டாக உடைத்து 
முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளை தனிமைப்படுத்தி அதனை யூனியன் பிரதேசமாக மாற்றி அந்தஸ்தை குறைத்து மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். அடுத்து முத்தலாக் தடை சட்டத்தினை கொண்டு வந்தனர். 70 ஆண்டுகளுக்கு முன் அறிஞர்கள் கூடி மூன்று மாதமாக ஆலோசனை செய்து கொண்டு வந்த குடியுரிமைச் சட்டத்தை மூன்றே நாட்களில் மாற்றினர். 

இது இந்தியாவையே துண்டாடும் செயலாகும். ஒரு சமுதாயத்தையே அச்சுறுத்தும் சட்டமாகும். அழிந்துபோன சனாதன தர்மத்தை தூக்கிப் பிடிப்பவர்களை வீழ்த்தும் சக்தி நம்மிடம் இருக்கிறது. சனாதன தர்மத்தை, இந்தி மொழியை, இந்தி கலாச்சாரத்தை நிலைநாட்டுவதற்காக தொடங்கிய பாரதிய ஜனதா,ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பல முகங்களில் ஒன்று. தற்போதைய தேர்தல் மதசார்பற்ற தன்மையா மதவாதமா, தமிழா இந்தியா , திராவிடமாசனாதன தர்மமா என்ற கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய தத்துவப் போராகும்.மிகுந்த விழிப்புணர்வோடு வாக்களிக்க வேண்டுகிறேன் எளிய வேட்பாளரான மாங்குடிக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் நகர காங்கிரஸ் தலைவர் பாண்டிமெய்யப்பன், நகர திமுக செயலாளர் குணசேகரன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சித்திக், மாவட்ட செயலாளர்கள் அப்பாவு, ராமசாமி, முகமது கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்