சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மக்கள் குறைதீர்க்கும் மையமாக செயல்படும்; பா.ஜ.க. வேட்பாளர் பாண்டுரங்கன் உறுதி
விருதுநகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பாண்டுரங்கன் நடையநேரி செங்குன்றாபுரம் ஆமத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் கிராம மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
மேலும் நகர் பகுதியிலும் பல வார்டுகளுக்கு சென்று மக்களை சந்தித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார். அவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் சென்றிருந்தனர் பாண்டுரங்கன் சென்ற பகுதிகளில் மக்கள் அவரை அன்புடன் வரவேற்று ஆதரவளிப்பதாக தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து வேட்பாளர் பாண்டுரங்கன் மேலும் தெரிவித்ததாவது, நான் பொது வாழ்வில் அடியெடுத்து வைப்பது பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான். அதற்காகத்தான் பா.ஜ.க. சார்பில் வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். ஏனெனில் பாரத பிரதமர் மோடி மக்களுக்காக சேவை செய்வதையே தன் வாழ்நாள் பணியாக மேற்கொண்டுள்ளார். மேலும் அதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து உள்ளார். அந்த வகையில் அவரை முன்மாதிரியாகக் கொண்டு நானும் இத்தொகுதி மக்களுக்கு என்னால் ஆன சேவைகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள தொகுதி மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். மேலும் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகம் கடந்த 5 ஆண்டுகளாக செயலிழந்து கிடப்பதாக பொதுமக்கள் புகார் கூறும் நிலை உள்ளது. ஆனால் எனக்கு வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் மையமாக செயல்படும். மேலும் பொதுமக்கள் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு தேவையான விண்ணப்பங்களை அனுப்ப சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலேயே பணியாளர்களை நியமித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து நலத்திட்ட உதவிகள் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன். தொகுதியை
பொருத்தமட்டில் கிராமப்பகுதிகளில் நகரப் பகுதிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டிய நிலை உள்ளது. அதிலும் குறிப்பாக கிராமப் பகுதிகளில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. எனவே அனைத்து கிராமங்களிலும் தேவைப்படும் வசதிகளை பற்றி கண்டறிந்து அவற்றை மேற்கொள்வதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்வேன். 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் முழு அளவில் வேலை பெற்று அதற்கான ஊதியத்தையும் தாமதமில்லாமல் பெறுவதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கிராமப்புற மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்வசதி செய்வதற்கும் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வேலை நிமித்தம் வரும் தொழிலாளர்கள் வந்து செல்ல தேவையான பஸ் வசதி செய்யப்படும். மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளை பாதுகாப்பாக செல்வதற்கு வசதியாக குறிப்பிட்ட பஸ் நிறுத்தங்களில் பஸ்சை நிறுத்தி பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். மேலும் பஸ் நிலையத்தில் உள்ள நவீன கழிப்பறை
முறையாக பராமரிக்கப்பட்டு முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.