பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புகொடி போராட்டம்

தாராபுரத்துக்கு 30-ந் தேதி வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புகொடி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2021-03-26 23:32 GMT
திருப்பூர்
தாராபுரத்துக்கு 30-ந் தேதி வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புகொடி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பிரதமருக்கு கருப்புகொடி
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று திருப்பூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் முத்து சிவகுமார், அமைப்பு செயலாளர் ரகுபதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் சட்டமன்ற தேர்தல் நிலைபாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் 120 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். 
ஆனாலும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்தும் பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணியை புறக்கணிக்க தமிழக மக்களுக்கு அழைப்பு விடுப்பது, தமிழகத்தில் பா.ஜனதா-அ.தி.முக. கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வருகிற 30-ந் தேதி தாராபுரம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புகொடி காட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.
பிரசாரம்
மேலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 4-ந் தேதி வரை தொடர்ச்சியாக பா.ஜனதா- அ.தி.மு.க.வை புறக்கணிக்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பிரசாரம் மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்