சேலம் மாவட்டத்தில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை

சேலம் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகரிப்பதால் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

Update: 2021-03-26 23:13 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகரிப்பதால் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா அதிகரிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு கடந்த மாதம் வெகுவாக குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பாதிப்பு குறைவு காரணமாக மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் குறைவான பேருக்கு தான் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஆனால் தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை மட்டும் மாவட்டத்தில் 6 லட்சத்து 75 ஆயிரத்து 113 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம்
மாவட்டத்தில் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசிடோஸ் போடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 1 லட்சத்து 60 ஆயிரம் கொரோனா தடுப்பூசி டோஸ் மாவட்டத்துக்கு வந்துள்ளது. இந்த நிலையில் மேலும் 25 ஆயிரம் கொரோனா தடுப்பூசி டோஸ் வந்துள்ளது. இதனிடையே பாதிப்பு அதிகரிப்பு காரணமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் இன்னமும் பொதுமக்கள் பலர் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருக்கின்றனர். இதன் மூலம் அதன் தாக்கம் அதிகரிக்க தான் வாய்ப்புள்ளது. எனவே கொரோனாவின் தாக்கத்தை புரிந்து கொண்டு மக்கள் செயல்பட்டால் தான் பரவலை குறைக்க முடியும் என்றனர்.

மேலும் செய்திகள்