சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சென்னிமலை
சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சென்னிமலை முருகன் கோவில்
சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர தேர் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பங்குனி உத்திர தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.
அதேபோல் இந்த ஆண்டும் கொரோனா பரவுதல் காரணமாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆனால் மற்ற நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. அதன்படி நேற்று சென்னிமலை முருகன் கோவிலில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
கொடியேற்றம்
இதற்காக நேற்று காலை 7 மணிக்கு மேல் சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளை படிக்கட்டுகள் வழியாக மலைக்கோவிலுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சாமிகள் அருள்பாலித்தனர்.
அதைத்தொடர்ந்து கோவிலுக்கு முன்பு உள்ள கொடி கம்பத்துக்கு பூஜைகள் செய்யப்பட்டு சேவல் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் மாலை 5 மணிக்கு மேல் படிக்கட்டுகள் வழியாக மீண்டும் உற்சவ மூர்த்திகள் கைலாசநாதர் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது.
ரத்து
இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக காலை 6 மணிக்கு வள்ளி- தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி, சப்பரம் மூலம் 4 ராஜ வீதிகள் வழியாக வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு பரிவேட்டை நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
முக கவசம்
வருகிற 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு மகா தரிசனமும், இரவு 7 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வருவதுடன், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் கோவில் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.