சேலம் தெற்கு, ஏற்காடு, வீரபாண்டி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
சேலம் தெற்கு, ஏற்காடு, வீரபாண்டி ஆகிய 3 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறித்து கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.
சேலம்:
சேலம் தெற்கு, ஏற்காடு, வீரபாண்டி ஆகிய 3 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறித்து கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
சேலம் தெற்கு, வீரபாண்டி மற்றும் ஏற்காடு (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் சேலம் அம்மாபேட்டை ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வைத்து எண்ணப்படுகின்றன. இதையொட்டி அங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ராமன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்து, வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களில் வைப்பதற்கும், பதிவான வாக்குகளை எண்ணுவதற்கும் சேலம் மாவட்டத்தில் 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முன்னேற்பாடு பணிகள்
அந்த வகையில், சேலம் அம்மாபேட்டை ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஏற்காடு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு அங்கு தேவையான பாதுகாப்பு, முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள், அந்தந்த சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள், வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பு அறைகளுக்கான பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அடிப்படை வசதிகள்
மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், தபால் வாக்குகள் இருப்பு வைப்பதற்கான அறைகளில் தேவையான பாதுகாப்பு வசதிகள், மின்சார வசதிகள், வாக்கு எண்ணும் இடங்களில் தேவையான தடுப்பு வேலிகள் அமைத்தல், வாக்கு எண்ணுவதற்கு தேவையான மேஜைகள் அமைத்தல், வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பு அறைகளில் இருந்து வாக்கு எண்ணும் இடத்திற்கு எந்திரங்களை எடுத்து வருவதற்கான தனி பாதைகள் அமைத்தல், முகவர்கள் வருவதற்கு தேவையான தனி பாதைகள் அமைத்தல், குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்திட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ராமன் கூறினார்.
இந்த ஆய்வின்போது, சேலம் மாநகராட்சி பொறியாளர் அசோகன், சேலம் தெற்கு தாசில்தார் சீனிவாசன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெங்கடாசலம் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.