தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு சீட்டுகள்; இன்று வழங்கப்படுகிறது

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு சீட்டுகள் இன்று (சனிக்கிழமை) வழங்கப்படுகிறது.;

Update: 2021-03-26 22:29 GMT
ஈரோடு
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு சீட்டுகள் இன்று (சனிக்கிழமை) வழங்கப்படுகிறது.
தபால் ஓட்டு
சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போலீசார், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோருக்கு தபால் ஓட்டு அளிக்க அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு அளிக்க வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என சுமார் 68 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் 7 ஆயிரத்து 200 பேர் தபால் ஓட்டு அளிக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 13 ஆயிரத்து 160 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு தபால் ஓட்டு படிவங்களை வழங்குவதற்காக ஓட்டு சீட்டுடன், படிவங்களை இணைத்து தயார் செய்யும் பணி ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது தபால் ஓட்டு சீட்டு, படிவங்கள் அனைத்தும் தனித்தனியாக பிரித்து கவரில் போட்டு வைக்கும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டார்கள்.
வினியோகம்
இதுகுறித்து ஈரோடு மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஆர்.டி.ஓ.வுமான சைபுதீன் கூறியதாவது:-
வாக்குச்சாவடியில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான 2-வது கட்ட பயிற்சி இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு சீட்டு வழங்கப்படுகிறது. அதில் தபால் ஓட்டு சீட்டு, ஒப்புதல் படிவங்கள் ஆகியன வினியோகிக்கப்படும். மேலும், பயிற்சிக்கு வருபவர்கள் அவர்களது தொகுதிக்கான ஓட்டுச்சீட்டு இணைக்கப்பட்டு கொடுக்கப்படும்.
தபால் ஓட்டுகளை பதிவு செய்யவும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. எனவே படிவங்களை பெற்றதும், விருப்பம் உள்ளவர்கள் தபால் ஓட்டுகளை பதிவு செய்து அதற்காக வைக்கப்பட்டு உள்ள பெட்டியில் செலுத்தலாம்.
இவ்வாறு ஆர்.டி.ஓ. சைபுதீன் கூறினார்.

மேலும் செய்திகள்