வீடு புகுந்து முகமூடி அணிந்த கும்பல் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காயம்

வீடு புகுந்து முகமூடி அணிந்த கும்பல் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காயமடைந்தனர்.

Update: 2021-03-26 21:35 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் வெங்கடேசபுரம் காலனி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருந்தது. இந்நிலையில் கடந்த 24-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த வெள்ளையனை (வயது 56) நாய் ஒன்று கடித்தது. இதனால் அவர் பெரம்பலூர் நகராட்சியில், வெங்கடேசபுரம் காலனி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் நேற்று முன்தினம் வெங்கடேசபுரம் காலனி பகுதியில் நாய்களை நகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென்று வெள்ளையன் வீட்டிற்கு வந்த முகமூடி அணிந்த கும்பல் நாய்கள் பிடிக்க சொல்லி எப்படி நகராட்சி அலுவலகத்தில் கூறலாம் என்று கேட்டு தகராறு செய்துள்ளனர். பின்னர் கையில் இருந்த இரும்பு குழாய் உள்ளிட்டவற்றால் வெள்ளையன், அவரது மனைவி கண்ணகி, மகன் ஜீவானந்தம் (32), மருமகள் பிரேமா (30) ஆகிய 4 பேர் மீது அந்த கும்பல் தாக்குதல் நடத்தி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றது. இதில் காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி அந்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்