ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்
சிதம்பரத்தில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள், குறைக்கப்பட்ட கல்வி கட்டணத்தை நடப்பு ஆண்டிலேயே செயல்படுத்த வலியுறுத்தி கடந்த 28 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். நேற்று அவர்கள் 29-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி நுழைவு வாயில் அருகே நடந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள், பயிற்சி டாக்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள், குறைக்கப்பட்ட கல்வி கட்டணத்தை நடப்பு ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். கொளுத்தும் வெயிலையும் பொருட் படுத்தாமல் அவர்கள் போராட்டம் நடத்தினர். மாலை 4 மணிக்கு மேல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.