தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் மூலம் வாக்களித்தனர்

நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் மூலம் வாக்களித்தனர்.

Update: 2021-03-26 20:54 GMT
ஊட்டி,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் என தபால் ஓட்டு கோரிய நபர்களிடம் இருந்து தபால் ஓட்டு சேகரிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்களிடம் தபால் ஓட்டு பெறும் பணி நேற்று முதல் தொடங்கியது. 

ஊட்டி ரெக்ஸ் பள்ளி, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, பெத்தலகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. 

அங்கு 3 தொகுதிகளுக்கும் தனித்தனியாக மேஜைகள் போடப்பட்டு, ஊழியர்கள் தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவத்தை தேர்தல் பணியாளர்களுக்கு வழங்கினர். அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என்று சரி பார்க்கப்பட்டு வாக்குச்சீட்டு, உறுதிமொழி படிவம் வழங்கப்பட்டது.

விண்ணப்ப படிவம் மற்றும் உறுதிமொழி படிவத்தை பூர்த்தி செய்து தபால் ஓட்டு போடுவதற்காக மறைவு அட்டை வைக்கப்பட்டு இருந்தது. ஓட்டு போட்ட வாக்குச்சீட்டை தபாலில் மடித்து வைத்து அந்தந்த தொகுதிகளுக்கு என்று சீலுடன் வைக்கப்பட்ட பெட்டிகளில் செலுத்தினர். 

 நேற்று முதல் நாள் என்பதால் தபால் வாக்கு செலுத்த தேர்தல் பணியாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தபால் வாக்கு நடைபெறுவது வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, நீலகிரியில் 3 தொகுதிகளில் 4,168 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்கள் இன்று (அதாவது நேற்று) மட்டுமல்லாமல் வருகிற நாட்களில் தொடர்ந்து தபால் வாக்கு செலுத்தலாம். 

தேர்தல் பணி ஆணை பெறும் நாளில் தபால் ஓட்டு செலுத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் ஊட்டி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தபால் வாக்கு செலுத்தலாம். அதன் பின்னர் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்