சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு
பிரதோஷத்தையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.
இந்த கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. கொரோனா தொற்றுநோய் காரணமாக உடல் வெப்ப பரிசோதனை, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதேபோல முக கவசம் அணிந்த பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரம் பகுதியிலிருந்து மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நடந்து சென்றனர். பக்தர்களின் வசதிக்காக மலைப்பாதையில் 5 இடங்களில் குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பக்தர்கள் மலைப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி இல்லை.
மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை 18 வகையான பொருட்களால் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரமகாலிங்கம் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில்பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விசுவநாத் ஆகியோர் செய்தனர்.