அ.தி.மு.க. ஆட்சியால் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

அ.தி.மு.க. ஆட்சியால் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது என கரூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2021-03-26 20:11 GMT
கரூர்
வெற்றி விழா மாநாடு போல...
 சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். திருச்சியில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு குளித்தலை வழியாக நேற்று கரூர் வந்த அவர், தி.மு.க. வேட்பாளர்கள் வி.செந்தில்பாலாஜி(கரூர்), மொஞ்சனூர் பி.ஆர்.இளங்கோ(அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்-தனி),  ரா.மாணிக்கம்(குளித்தலை) ஆகியோரை ஆதரித்து கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா ரவுண்டானாவில் ஆதரவு திரட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
 இது கூட்டமா?, அல்லது மாநாடா? என்று தெரியாத அளவுக்கு உள்ளது. தேர்தல் வெற்றிவிழா மாநாடு போல் உள்ளது. இந்த கூட்டத்தை பார்க்கும் போது எனக்கு ஒரு ஆசை வந்துள்ளது. பேசாமல் உங்களது முகங்களை பார்த்து கொண்டிருக்கலாம் போல் உள்ளது. உங்களை தேடி வந்துள்ளேன், நாடி வந்துள்ளேன். உங்களிடத்தில் ஓட்டு கேட்க வந்துள்ளேன். இங்கு போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். 
6-ந் தேதியோடு முடிய போகிறது
கழக ஊரான கரூருக்கு நான் வந்துள்ளேன். தொழில் நகரம் கரூர். முதன்முதலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளார். ஊடகங்களில் பல்வேறு கருத்து கணிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. எல்லாம் கருத்து கணிப்புகளும் தி.மு.க. அணி தான் வெற்றிபெற போகிறது என்று தெளிவாக சொல்லியிருக்கிறது. இதை பார்த்து ஆளுங்கட்சியினர் மிரண்டு போய் உள்ளனர். ஒரு தொலைக்காட்சியில் தென்மாவட்டங்களில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று வெளியிட்டு இருந்தனர். அந்த தொலைக்காட்சியை அரசு கேபிளில் நிறுத்தியுள்ளனர். இவர்களின் அதிகாரம் ஏப்ரல் மாதம் 6-ந் தேதியோடு முடியப்போகிறது.
 அமராவதி ஆற்றில் சுத்திகரிப்பு செய்யாமல் சாயக்கழிவு விடுபவர்களை காப்பாற்றி வருகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். பசுமை தீர்ப்பாணையம் விவசாயிகளுக்கு இழப்பீடு தர 10 ஆண்டுகள் ஆக போகிறது. அதேபோல் போக்குவரத்துத்துறையில் ஜி.பி.எஸ். கருவி பொறுத்துவது, ஸ்டிக்கர் ஒட்டுவது போன்றவற்றை தனது பினாமிகளுக்கு மட்டுமே கொடுத்து உள்ளார். கரூர் அரசு பஸ்களுக்கு கூண்டு கட்டுவதற்கு தனது பினாமிகளுக்கு ஒப்புதல் தருவதால், பாரம்பரியமாக பஸ்பாடி கட்டக்கூடிய உரிமையாளர்கள் தற்போது குமுறிக்கொண்டு இருக்கிறார்கள்.
மோசமான ஆட்சி
அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி, சாத்தான்குளத்தில் இரட்டை கொலை உள்பட பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. அதேபோல் பொள்ளாச்சியில் பாலியல் விவகாரத்தில் ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் கடத்தி சென்று, பண்ணை வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ பதிவு செய்து, அவர்களை மிரட்டி அவர்களிடம் பணம் பறிக்கின்ற செயல் கிட்டத்தட்ட 3 வருடங்களாக நடந்துள்ளது. ஆளுங்கட்சியின் தலையீடு இதில் இருக்கிறது. அதிகாரத்தில் இருக்கக்கூடிய மகன்கள் எல்லாம் அதில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
 டெல்டா பகுதியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கிற பிரச்சினை, தேனியில் நியூட்ரோ திட்டம், சேலத்தில் 8 வழிச்சாலைக்காக விவசாய நிலங்கள் அழிக்கப்படுவது என அனைத்திற்கும் காரணமாக ஆட்சிதான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு. 2 உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார்கள். 6 லட்சம் கோடி முதலீட்டை கொண்டு வந்ததாக கூறுகிறார்கள். இதனால் எத்தனை தொழிற்சாலைகள் வந்துள்ளது. எத்தனை பேருக்கு வேலைவாங்கி கொடுத்து உள்ளீர்கள். 
ரூ.4 ஆயிரம் கொேரானா நிதி
 கொரோனாவால் தமிழகத்தில் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்து உள்ளனர். இதற்கு காரணம் அ.தி.மு.க. அரசு தான். விவசாயிகள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், சிறு, குறு தொழில் செய்யகூடியவர்கள் தொழில் நிறுவனங்கள் எந்த தரப்பினரும், இந்த ஆட்சியில் நிம்மதியாக இல்லை. 
தி.மு.க. தேர்தல் அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறுவனங்களுக்கு கடன் உதவி செய்ய 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 3-ந்தேதி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் அன்று கொரோனா நிதி ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.
50 ஆண்டுகள் பின்னோக்கி...
கரூர் மாவட்டத்தில் உள்ளூர் கட்டுமான பணிகளுக்காக அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் மாட்டு வண்டி உரிமையாளர்கள் மணல் அள்ள அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கரூர் நகராட்சி, மாநகராட்சியாக்கப்படும். கரூர் மாவட்டத்தில் அரசு கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும். கரூரில் புதிய பேருந்து முனையம், காமராஜ் மார்க்கெட்டில் புதிய மார்க்கெட் வளாகம், நம்மாழ்வார் பெயரில் அரசு இயற்கை வேளாண்மை கல்லூரி, வெற்றிலை மற்றும் வாழை ஆராய்ச்சி மையம், பணிபுரியும் பெண்கள் தங்குவதற்கு ஏற்ற விடுதிகள், முருங்கை பவுடர் உற்பத்தி தொழிற்சாலை, சாயக்கழிவுகளை சுத்திகரிப்பதற்கு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, சாயப்பட்டறை பூங்கா, நவீன தொழிற்வசதியுடன் கூடிய பஸ்பாடி பூங்கா ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்படும். திருக்காம்புலியூரில் உள்ள லட்சுமி நாராயண சாமி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும். அரவக்குறிச்சியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைகள் நவீன படுத்தப்படும். புகளூர், பள்ளப்பட்டி பேரூராட்சிகள், நகராட்சிகளாக உயர்த்தப்படும். குளித்தலையில் புதிய பஸ் நிலையம், பாதாள சாக்கடை திட்டம் உருவாக்கப்படும். குளித்தலை-மணப்பாறை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்டம், தோகைமலை, கடவூர் பகுதிகளுக்கு காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். காகிதஆலை மற்றும் சிமெண்டு ஆலைகளுக்கு நிலம் வழங்கிய குடும்ப வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர்களை, நிரந்தர தொழிலாளர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டங்கள் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் சொல்லியுள்ளேன். ஆனால் இந்த அ.தி.மு.க. ஆட்சியால் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது.
திராவிட மண்
அதனால்தான் திருச்சி பொதுக்கூட்டத்தில் 7 உறுதிமொழிகளை கூறினேன். எப்படியாவது தமிழ்நாட்டில் மதவெறியை தூண்டி, சமஸ்கிருதத்தை திணிக்க பா.ஜ.க. ஈடுபட்டு இருக்கிறது. அதற்கு அ.தி.மு.க. அரசு துணை நிற்கிறது. ஆனால் அது நிறைவேறாது. ஏனென்றால் இது திராவிட மண். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் வாழ்ந்த மண். இந்த மோடி மஸ்தான் வேலையெல்லாம் தமிழ்நாட்டில் பலிக்காது. 
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்