கரூரில் வருமான வரித்துறை சோதனை: நிதி நிறுவனங்களில் ரூ.5 கோடி பறிமுதல்?
கரூரில் உள்ள நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் 2 நாட்களாக நடத்திய சோதனையில் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கரூர்
வருமான வரித்துறையினர் சோதனை
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதற்காக கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவிற்கு குறைந்த நாட்களே உள்ளதால் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய கோடிக்கணக்கான ரூபாய் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் நிறுவனங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. அதனைத்தொடர்ந்து தி.மு.க.வை சேர்ந்த எ.வ.வேலுவுக்கு சொந்தமான 18 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
கரூர் நிதி நிறுவனங்கள்
கரூரில் உள்ள நிதி நிறுவனங்களிலும் அதிகளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நகரின் மிக முக்கிய பகுதியான மகாத்மா காந்தி சாலையில் உள்ள 5 நிதி நிறுவனங்களில் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த நிதி நிறுவனங்களில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் காலை முதல் இரவு 9 மணி வரை நடந்த இந்த சோதனை 2-வது நாளாக நேற்றும் நடந்தது.
ரூ.5 கோடி பறிமுதல்?
2 நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டு 2 பெரிய பைகளில் எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. தேர்தல் சமயத்தில் நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறை நடத்திய இந்த சோதனை கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.