1½ லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்கள்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் 1 லட்சத்து 51 ஆயிரம் பேர் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

Update: 2021-03-26 19:52 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் 1 லட்சத்து 51 ஆயிரம் பேர் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் 
 மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி வெளியிடப்பட்டது.
 மாவட்டத்தில் ராஜபாளையம் தொகுதியில் 2,38,701 வாக்காளர்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 580 வாக்காளர்களும், சிவகாசி தொகுதியில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 941 வாக்காளர்களும், சாத்தூர் தொகுதியில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 502 வாக்காளர்களும், விருதுநகர் தொகுதியில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 327 வாக்காளர்களும்,  அருப்புக்கோட்டை தொகுதியில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 980 வாக்காளர்களும், திருச்சுழி தொகுதியில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 720 வாக்காளர்களும் ஆக மொத்தம் 7 தொகுதிகளிலும் 16 லட்சத்து 68 ஆயிரத்து 751 வாக்காளர்கள் இருந்தனர்.
இணைப்பட்டியல் 
 இந்நிலையில் கடந்த 19-ந் தேதி வெளியான இணைப்பட்டியலின்படி 7 தொகுதிகளிலும் புதிதாக 2,245 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர்.
 இந்தநிலையில் தற்போது 7 தொகுதிகளிலும் 16 லட்சத்து 70ஆயிரத்து 996 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 
இவர்களில் 18 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 41 ஆயிரத்து 489 பேரும், 20 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட 3 லட்சத்து 45 ஆயிரத்து 666 பேரும், 30 வயது முதல் 39 வயது வரை உள்ளவர்கள் 3 லட்சத்து 69 ஆயிரத்து 679 பேரும், 40 வயது முதல் 49 வயது வரை உள்ளவர்கள் 3 லட்சத்து 51 ஆயிரத்து 28 பேரும் ஆவர். 
முதல் முறை 
அதேபோல 50 முதல் 59 வயதுவரை உள்ளவர்கள் 2 லட்சத்து 75 ஆயிரத்து 774 பேரும், 60 வயது முதல் 69 வயது வரை உள்ளவர்கள் 1 லட்சத்து 70 ஆயிரத்து 665 பேரும், 70 வயது முதல் 79 வயது உள்ளவர்கள் 88 ஆயிரத்து 612 பேரும், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் 28 ஆயிரத்து 93 பேர் என ஆக மொத்தம் 16 லட்சத்து 70 ஆயிரத்து 996 வாக்காளர்கள் உள்ளனர்.
 இவர்களில் 18 வயது முதல் 19 வரை உள்ள 41 ஆயிரத்து 459 பேரும் 20 வயது முதல் 22 வயது வரை உள்ள சுமார் ஒரு லட்சத்து 616 பேரும் என மொத்தம் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 505 வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
நிர்ணயிப்பவர்கள்
 2016-ம் ஆண்டு தேர்தலில் 7 தொகுதிகளிலும் 15 லட்சத்து 40 ஆயிரத்து 318 வாக்காளர்கள் 1 லட்சத்து 30 ஆயிரம் முதல் முறை வாக்காளர்களும் இருந்தனர். இந்தநிலையில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் முதல் முறை வாக்களிக்க உள்ள ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 505 வாக்காளர்கள் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவர்களாக இருப்பார்கள் என கருதப்படும் நிலையில் வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் அவர்களது ஆதரவை பெறுவதில் முனைப்புடன் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்