2 பேரை கொன்ற காட்டுயானையை கும்கி உதவியுடன் தேடும் பணி தீவிரம்

பந்தலூர் அருகே 2 பேரை கொன்ற காட்டுயானையை கும்கி உதவியுடன் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-03-26 19:17 GMT
பந்தலூர்,

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பட்டி அருகே உள்ள பெருங்கரை பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி(வயது 63). கூலி தொழிலாளி. இவரும், அருகில் உள்ள ஏலமன்னா பகுதியை சேர்ந்த சக கூலி தொழிலாளி சடயன்(52) என்பவரும் நேற்று முன்தினம் வேலை முடிந்து, வனப்பகுதி வழியாக தங்களது வீடுகளுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது அவர்களை காட்டுயானை மிதித்து கொன்றது. இதன் எதிரொலியாக காட்டுயானைகள் அட்டகாசத்தை தடுக்கக்கோரி பந்தலூர்-பாட்டவயல் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், வன அலுவலர் ஓம்கார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அமீர் அகமது, ஜெய்சிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் இரவு 7 மணி முதல் 9.30 வரை அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேடுதல் வேட்டை

இதையடுத்து அந்த காட்டுயானையை வனத்துறையினர் 3 குழு அமைத்து, கண்காணித்து வந்தனர். அப்போது சக காட்டுயானைகளுடன் சேர்ந்து, அருகில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி யானை பொம்மன் வரவழைக்கப்பட்டு, அந்த வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. 

அப்போது அந்த காட்டுயானை அங்கு இல்லை. இதனால் எளியாஸ் கடை பகுதி வழியாக கேரள வனப்பகுதிக்குள் சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் தொடர்ந்து வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்