பந்தல் காய்கறிகள் அறுவடை தொடங்கியது
நெகமம் பகுதியில் பந்தல் காய்கறிகள் அறுவடை தொடங்கியது. ஆனால் அதன் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
நெகமம்,
பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளான செட்டியக்காபாளையம், ஆண்டிபாளையம், பெரியகளந்தை, வஞ்சிபாளையம் மற்றும் பல பகுதிகளில் பந்தல் காய்கறிகளான புடலங்காய், பாகற்காய், சுரைக்காய், பீர்க்கங் காய் ஆகியவை பல ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது.
தற்போது இந்த காய்கறிகள் அறுவடைக்கு தயாரானதால் அவற்றை அறுவடை செய்யும் பணி தொடங்கி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
போதிய விலை இல்லை
நெகமம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் ஜூன் மற்றும் நவம்பர் மாதத்தில் பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்யப்படும். 3 மாத கால பயிரான இவற்றை அறுவடை நேரத்தில் கேரளாவில் இருந்து வியாபாரிகள் தோட்டத்துக்கே வந்து அவற்றை வாங்கி செல்வார்கள்.
ஆனால் இந்த ஆண்டு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் கேரள வியாபாரிகள் யாரும் வரவில்லை. அதற்கு பதிலாக கோவையை அடுத்த துடியலூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளே வந்து வாங்கி செல்கிறார்கள்.
விவசாயிகள் கவலை
இதன் காரணமாக விலை மிகவும் குறைந்து உள்ளது. புடலங்காய் கிலோ ரூ.5-க்கும், பாகற்காய் ரூ.22-க்கும் விற்பனையாகுகிறது. புடலங்காய், பாகற்காயை வாரத்துக்கு 2 முறை பறிக்கலாம். ஏக்கருக்கு 600 கிலோ கிடைக்கும்.
கடந்த முறை சாகுபடி செய்தபோது கிடைத்த விலை இந்த முறை கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி கிடைத்த விலைக்கு அவற்றை விற்று வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கவலையுடன் கூறினார்கள்.