ஒடுகத்தூர் அருகே வன விலங்குகளை வேட்டையாட சென்ற கூலித்தொழிலாளி துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தார்.
ஒடுகத்தூர் அருகே வேட்டைக்கு சென்ற தொழிலாளி துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து சாவு
அணைக்கட்டு
வேட்டைக்கு சென்றவர்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த ஆசனம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, விவசாயி. இவரின் மகன் வெங்கடேசன் (வயது 30), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 14 மாதங்கள் ஆகிறது. மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். வெங்கடேசன் மற்றும் அவரின் பெற்றோர் கிராமம் அருேக காட்டுப்பகுதியையொட்டி உள்ள அவர்களின் சொந்த விவசாய நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் வெங்கடேசன் நேற்று முன்தினம் மாலை தான் வைத்திருந்த உரிமமில்லா கள்ள நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு காட்டில் உள்ள வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக மலைப் பகுதிக்குச் சென்றார். ஆனால் இரவு வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை.
பொய்யான தகவல்
ேநற்று அதிகாலை 5.30 மணியளவில் காட்டில் துப்பாக்கி வெடித்த சத்தம் ஒலித்தது. அந்தச் சத்தத்தைக் கேட்டதும், வெங்கடேசனின் பெற்றோரும், உறவினர்களும் சம்பவ இடத்தை நோக்கி ஓடினர். அப்போது ஒரு நிலத்தின் அருகே பள்ளத்தில் கழுத்தில் குண்டுகள் பாய்ந்த நிலையில் வெங்கடேசன் துப்பாக்கியுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.
வெங்கடேசனின் உடலை கைப்பற்றி வீட்டுக்குக் கொண்டு வந்து, போலீசுக்கு தெரியாமல் உறவினர்கள் அடக்க செய்ய முயன்றனர். ஆனால் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கள்ள நாட்டுத்துப்பாக்கியை எடுத்து, அருகில் உள்ள ஆற்றில் வீசி விட்டதாகக் கூறப்படுகிறது. அவரின் குடும்பத்தினர், ஊர் பொதுமக்களிடம் வெங்கடேசன் இரவில் விவசாய நிலத்தில் நடந்து சென்றபோது, தடுமாறி விழுந்ததில் கழுத்தில் குச்சி குத்தி இறந்து விட்டதாகக் கூறி பொய்யான தகவலை பரப்பினர்.
போலீஸ் விசாரணை
இந்தத் தகவலை கேள்விப்பட்ட வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். மேலும் வேலூர் துைண போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வெங்கடேசனின் கழுத்தில் நாட்டுத் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தது தெரிய வந்தது. அவரின் பிணத்தை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வெங்கடேசன் குடும்பப் பிரச்சினையால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை சுட்டுக்கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கடேசனின் கள்ள நாட்டுத்துப்பாக்கி அருகில் உள்ள ஆற்றில் வீசப்பட்டுக் கிடந்ததைப் போலீசார் கண்டு பிடித்து மீட்டனர்.