கோவையில் உருமாறிய வைரஸ் பரவுகிறதா

கோவையில் உருமாறிய வைரஸ் பரவுகிறதா என்ற ஆய்வு நடத்தப்படுகிறது.

Update: 2021-03-26 17:41 GMT
கோவை,

தமிழகத்தில் குறைந்திருந்த கொரோனா தாக்கம் தற்போது கணிசமாக உயர்ந்து வருகிறது. அதன்படி கோவையிலும் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மராட்டியம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் வேகமாக பரவும் ஜீனோமிக் என்ற கொரோனா வைரஸ் கோவையிலும் பரவுகிறதா என்பதை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்களின் சளி மாதிரிகளை எடுத்து பெங்களூர் ஆய்வகத்துக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல் குறிப்பிட்ட சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்படுகின்றன.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வேகமாக பரவும் தன்மை கொண்டது மராட்டியம்,  பஞ்சாபில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. அது உருமாறிய கொரோனா வைரசா என்ற ஆய்வு நடத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் ஆர்.என்.ஏ. வைரஸ் என்பதால் அது அடிக்கடி தன்னை மாற்றிகொள்ளும் இயல்புடையது. 

அப்படி உருமாறிய வைரஸ்கள் தான் வெளிநாடுகளில் புதிதாக கண்டறியப்பட்டுள்ளன. ஜீனோமிக் என்று அழைக்கப்படும் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் முந்தைய வைரசை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது. 

எனவே அத்தகைய வைரஸ் வடமாநிலங்களில் பரவுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த வைரஸ் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் அது மிக வேகமாக அந்த கு டும்பத்தில் உள்ள அனைவரையும் பாதித்து விடும். 

பொது இடங்களில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் கொத்து கொத்தாக பரவி விடும்.
கோவை மாவட்டத்தில் அத்தகைய பாதிப்பு இல்லை என்றாலும் தினசரி பாதிப்பில் ஒன்றிரண்டு குடும்பத்தினர் மொத்தமாக பாதிக்கப்படுகின்றனர். 
இதே போல ஒரே இடத்தில் (கிளஸ்டர்) மொத்தமாக பாதிக்கப்படுபவர்களும் இல்லை. 
எனவே கோவை மாவட்டத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பற்றிய தகவல்கள் இல்லை என்றாலும் முன்எச்சரிக்கையாக மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படுகின்றன.

எனவே பொது இடங்களுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி விடுதல் போன்ற முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலே பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்