முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

ராமநாதபுரத்தில் கலெக்டர் நகரின் முக்கிய வீதிகளில் சென்று முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தார்.

Update: 2021-03-26 15:35 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரத்தில் நேற்று கலெக்டர் நகரின் முக்கிய வீதிகளில் சென்று முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தார். 
கொரோனா

உலகஅளவில் பெரும் பேராபத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் பயனாக பெரும்பாலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் இந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.. குறிப்பாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இந்த எண்ணிக்கை அதிகஅளவில் வருவதை தொடர்ந்து மீண்டும் கடுமையான நடவடிக்கைகள் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. 
இதன்படி முககவசம் அணிவதை கட்டாயமாக்கி அதனை செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டு உள்ளது. இந்த பணியை அனைத்து மாவட்ட நிர்வாகமும் முழுவீச்சில் மேற்கொள்ள உத்தரவிட்டதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக சம்பந்தப்பட்ட துறையினர் தெருத்தெருவாக சென்று முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து வருகின்றனர்.
அபராதம்
 
இந்நிலையில் நேற்று காலை கலெக்டரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ராமநாதபுரம் நகரில் திடீரென்று சென்று முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தார். நகரசபை ஆணையாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட துறையினருடன் நகரின் முக்கிய வீதிகள், சாலை தெரு, அரண்மனை உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிரடியாக சென்று முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தார். 
இதுகுறித்து கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:- கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். கடந்த முறை இந்த ஒத்துழைப்பால்தான் கொரோனா கட்டுக்குள் வந்தது. மீண்டும் மக்கள் கவனக்குறைவாக உள்ளதாலேயே பரவி வருகிறது. இதனை மக்களுக்கு உணர்த்தி மீண்டும் எச்சரிக்கையாக இருக்க வைப்பதற்காகவே இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. காலை முதல் நடந்த சோதனையில் முககவசம் அணியாமல் அனுமதித்த 5 நிறுவனங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நகர் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்