திண்டுக்கல்லில் தபால் ஓட்டு போட்ட தேர்தல் அலுவலர்கள்
திண்டுக்கல்லில் 2-வது கட்ட பயிற்சியில் பங்கேற்ற தேர்தல் அலுவலர்கள் தபால் ஓட்டுகளை ஆர்வத்துடன் போட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் 2-வது கட்ட பயிற்சியில் பங்கேற்ற தேர்தல் அலுவலர்கள் தபால் ஓட்டுகளை ஆர்வத்துடன் போட்டனர்.
தேர்தல் அலுவலர்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், நத்தம், ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளும் 224 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 2 ஆயிரத்து 673 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் தேர்தல் பணிக்காக 12 ஆயிரத்து 832 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களுக்கு முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது, கணினி மூலம் ரேண்டம் முறையில் பணியாற்ற வேண்டிய தொகுதி ஒதுக்கப்பட்டது. மேலும் தேர்தல் பணிக்கான ஆணையும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 7 தொகுதிகளிலும், தேர்தல் அலுவலர்களுக்கு நேற்று 2-வது கட்ட பயிற்சி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் பணியாற்றும் அலுவலர்களுக்கு, திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிற்சி நடைபெற்றது.
தபால் ஓட்டு
அப்போது தபால் வாக்கு செலுத்துவதற்கான வாக்குச்சீட்டு, படிவம் உள்ளிட்டவை தேர்தல் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டன. அதை பெற்றுக்கொண்ட தேர்தல் அலுவலர்கள் ஆர்வத்துடன் தங்களுடைய தபால் ஓட்டுகளை போட்டனர். அப்போது அவர்கள் வரிசையில் நின்று சீல் வைக்கப்பட்ட பெட்டியில் தபால் ஓட்டுகளை போட்டனர். இதனை தேர்தல் பொது பார்வையாளர் பாபுசிங் ஜமோட் பார்வையிட்டார்.
இதேபோல் ஒட்டன்சத்திரம் தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கு, ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயிற்சி நடைபெற்றது. இதனை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பணியாற்றும்படி அறிவுரை வழங்கினார். இதில் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.