ஆட்டுகொல்லி நோயை தடுக்க கால்நடை துறை அறிவுறுத்தல்

வெயில் காலத்தில் ஆடுகளை பாதிக்கும் ஆட்டுக்கொல்லி நோயை தடுக்கும் வழிமுறைகள் குறித்து கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் டாக்டர் சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2021-03-26 13:41 GMT
மதுரை,மார்ச்.
வெயில் காலத்தில் ஆடுகளை பாதிக்கும் ஆட்டுக்கொல்லி நோயை தடுக்கும் வழிமுறைகள் குறித்து கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் டாக்டர் சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அறிகுறிகள்
ஆட்டுக்கொல்லி நோயானது வெயில் காலத்தில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளில் அதிக இறப்பை ஏற்படுத்தி ஆடு வளர்ப்போருக்கு அதிக பொருளாதார இழப்பை ஏற்படுத்தகூடிய ஒரு கொடிய நோயாகும். இந்த நோய் ஒரு வகை வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. இந்த நோய் பாதித்த ஆடுகளுக்கு அதிக காய்ச்சல் 3 முதல் 5 நாட்கள் வரை நீடிக்கும். மூக்கில் இருந்து சளி வடியும். வாயின் உட்புறங்களில் ஈறுகள் மற்றும் நாக்கில் புண் ஏற்பட்டு அதிக உமிழ் நீர் வடிதல், கழிச்சல் இருக்கும். சோர்ந்து தீனி உட்கொள்ளாது.
இந்த நோய் பாதித்த ஆடுகளிடம் இருந்து பிற ஆடுகளுக்கு நோய் எளிதில் தொற்றிக் கொள்ளும். ஆடுகள் இருமும் போது வெளிப்படும் சளி மற்றும் உமிழ் நீர் ஆகியன காற்றில் கலந்து மற்ற ஆடுகளின் மீது படும் போது நோய் தொற்றிக் கொள்கிறது. நோய் உள்ள ஆடுகளின் கண் மற்றும் மூக்கில் இருந்து வடியும் நீர் மற்றும் சிறுநீர் ஆகியவற்றால் நோய் பரவும்.
சிகிச்சை முறைகள்
நோய் பாதித்த ஆடுகளை தனியாக பிரித்து பராமரிக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 90 கிராம் உப்பை கலந்து கொதிக்க வைத்து ஆற விட்டு, இந்த உப்பு நீரை கொண்டு வாய் மூக்கு பகுதியை கழுவ வேண்டும். வாய் புண்ணை குணமாக்கும் கிளிசரின் மருந்தை பாதிக்கப்பட்ட ஆடுகளின் வாயில் தினமும் வாய்புண்கள் ஆறும் வரை தடவலாம். உடலுக்கு தெம்பு தரும் குரோவிபிளக்ஸ் போன்ற பி காம்பிளக்ஸ் சத்து மருந்துகளை ஆடுகளுக்கு காலை, மாலை வழங்கலாம். டேராமைசின் பவுடர் அல்லது டேராமைசின் லிக்விட் ஆன்டிபயாடிக் மருந்து அல்லது என்டிரோபிளாக்சின் லிக்விட் ஆன்டிபயாடிக் மருந்து ஆகியவற்றை கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி தண்ணீர் கலந்து கொடுக்கலாம்.
தடுப்பூசி
ஆட்டுக்கொல்லி நோய்க்கு பி.பி.ஆர் தடுப்பூசியை ஆண்டுக்கு ஒருமுறை, குறிப்பாக 3 முதல் 6 மாத வயதிற்கு உட்பட்ட ஆட்டு குட்டிகளுக்கு கண்டிப்பாக போட வேண்டும். வெயில் காலங்களில் மேய்ச்சல் நிலங்களில் தீவனம் குறைவாக கிடைப்பதாலும் மற்றும் அதிக சுற்றுப்புற வெப்பத்தின் காரணமாகவும் ஆடுகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் பி.பி.ஆர் தடுப்பூசியை வருடம் ஒரு முறை போடுவதன் மூலம் அதிக மழை மற்றும் அதிக வெயில் காலங்களில் இந்நோய் ஆடுகளை தாக்காதவாறு காப்பாற்ற இயலும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்