வாலிபரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு

திருவள்ளூர் மாவட்டம் வாலிபரை தாக்கி பணம், விலை உயர்ந்த செல்போன் போன்றவற்றை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர்.;

Update: 2021-03-26 13:41 GMT
பெரியபாளையம், 

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வேப்பம்பட்டு கிராமம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 21). இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் பூச்சிஅத்திப்பேடு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது நண்பர்கள் 2 பேர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர்களை காப்பாற்ற உதவி செய்யுமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து குமார் தனது மோட்டார் சைக்கிளில் அந்த நபரை ஏற்றிக்கொண்டு வாணியன்சத்திரம் கிராமத்தில் உள்ள சாய்பாபா கோவில் அருகே சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத 2 பேர் குமாரை வழிமறித்து தாக்கியுள்ளனர். உதவி கேட்டு வந்த நபர் மற்றும் அங்கு பதுங்கி இருந்த 2 பேர் என்று 3 பேரும் சேர்ந்து குமாரை கண்மூடித்தனமாக தாக்கினர்.

இதில் குமார் கூச்சலிட்டவாறு மயங்கி விழுந்தார். பின்னர் குமாரின் மோட்டார் சைக்கிள், அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரம், விலை உயர்ந்த செல்போன் போன்றவற்றை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்தார்.

பின்னர் இது குறித்து வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபப்பி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை தாக்கி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்