திருவிடைமருதூர் தொகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு பாடுபடுவேன்; அ.தி.மு.க. வேட்பாளர் யூனியன் வீரமணி வாக்குறுதி

திருவிடைமருதூர் தொகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு பாடுபடுவேன் என்று அ.தி.மு.க. வேட்பாளர் யூனியன் வீரமணி கூறினார்.

Update: 2021-03-26 06:00 GMT
வாக்கு சேகரிப்பு
திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் யூனியன் எஸ். வீரமணி  நேற்று காலை திருப்பனந்தாள் ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் வேட்பாளருடன் திருப்பனந்தாள் ஒன்றிய கழக செயலாளர் ஆர். கருணாநிதி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்று வாக்கு சேகரித்தனர். பந்தநல்லூர் பகுதிக்கு சென்ற  வேட்பாளர் யூனியன் எஸ். வீரமணி கூறியதாவது:- 

பொருளாதார மேம்பாடு
அம்மாவின் ஆசியோடு நடைபெறும் அ.தி.மு.க.. ஆட்சி தொடர எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.  முதல்-அமைச்சரின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நீங்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும். திருவிடைமருதூர் தொகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு பாடுபடுவேன். மக்களின்  தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவேன். அரசின் நலத்திட்டங்களை முழுமையாக நாம் பெற  இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். சாதாரண ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த எனக்கு வாக்களித்தால் திருவிடைமருதூர்  தொகுதியை பொருளாதார ரீதியாக உயர்த்த முயற்சிகளும் செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.

திருபுவனம் பேரூராட்சி
மேலும் அ.தி.மு.க. வேட்பாளர் வீரமணியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்  திருபுவனம் பேரூராட்சி பகுதியில் உள்ள பொறுப்பாளர்களுடன் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர செயலாளர் சிங்.எஸ்.செல்வராஜ் தலைமை தாங்கினார். திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.கே. அசோக்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எல். தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்  முன்னாள் அமைச்சர் ஜெயபால் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி  பேசினார்.

மேலும் செய்திகள்