சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. விளங்கி வருகிறது; அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் பிரசாரம்

சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. விளங்கி வருகிறது என்று அ.தி.மு.க வேட்பாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார்.

Update: 2021-03-26 05:30 GMT
தீவிர வாக்குசேகரிப்பு 
திருவாரூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம் தொகுதிக்குட்பட்ட கூத்தாநல்லூர், லட்சுமங்குடி உள்ளிட்ட இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்ட வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வத்தை திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். 

பாதுகாப்பு அரணாக 
கூத்தாநல்லூரில் பிரசாரம் செய்த ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் கூறியதாவது:- அ.தி.மு.க. தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர்., மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் சிறுபான்மை மக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர்கள். அந்த வகையில் முதல்-அமைச்சர்  எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக 
விளங்கி வருகிறார்கள். 

நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு 
சிறுபான்மை மக்களின் உணர்வுகளை மதிக்க கூடிய இயக்கமாக அ.தி.மு.க. தொடர்ந்து விளங்கி வருகிறது. சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் கேடயமாக அ.தி.மு.க. விளங்கும். அ.தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் ஹஜ் புனித பயணத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும்  சிறுபான்மையின மக்களின் மயான இடங்கள் அரசால் விலையில்லாமல் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதிகள் எல்லாம் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும். இதேபோல் மக்கள் நலத்திட்டங்கள் 
தொடர்ந்து நடைபெற இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்