சேலத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஊர்க்காவல் படைவீரர்கள்

சேலத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஊர்க்காவல் படைவீரர்கள் ஈடுபட உள்ளனர்.

Update: 2021-03-26 00:00 GMT
சேலம்:
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், வாக்குப்பதிவு நாளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீசாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 
இந்தநிலையில், சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஊர்க்காவல் படை வீரர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஊர்க்காவல் படை கமாண்டர் பெரியசாமி தலைமை தாங்கி பேசும்போது, ‘சட்டசபை தேர்தல் முடியும் வரை ஊர்க்காவல் படையினருக்கு விடுமுறை கிடையாது. வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிகளில் போலீசாருடன் இணைந்து தேர்தல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். அரசியல் கட்சி பாகுபாடின்றி தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள 330 ஊர்க்காவல் படையினருக்கு வருகிற 5-ந் தேதி தேர்தல் பாதுகாப்பு பணி ஒதுக்கீடு செய்யப்படும். 6-ந் தேதி ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லும் வரை பணியில் இருக்க வேண்டும்’ என்றார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊர்க்காவல் படை சப்-இன்ஸ்பெக்டர் பாலசரஸ்வதி, ஏட்டு நாராயணன் உள்பட ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்