அடுத்தடுத்து உள்ள 3 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு
அவினாசியில், நள்ளிரவில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் அடுத்தடுத்து உள்ள 3 கடைகளில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.2¼ லட்சத்தை திருடி சென்றனர்.
அவினாசி
அவினாசியில், நள்ளிரவில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் அடுத்தடுத்து உள்ள 3 கடைகளில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.2¼ லட்சத்தை திருடி சென்றனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
3 கடைகளில் திருட்டு
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் சேவூர் ரோட்டில் பேக்கரி, மொத்த மளிகை கடை மற்றும் பலசரக்கு கடை ஆகியவை அடுத்தடுத்து உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து கொண்டு இரவு 11 மணியளவில் 3 கடைகளின் உரிமையாளர்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
மீண்டும் நேற்று காலையில் அவர்கள் கடை திறக்க வந்தனர். அப்போது 3 கடைகளின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடைக்குள் சென்று பார்த்தபோது பேக்கரியில் கல்லாபெட்டியை உடைத்து அதிலிருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், மளிகை கடையில் இருந்த ரூ.90 ஆயிரம், 8 பண்டல் சிகரெட்டுகள் மற்றும் பலசரக்கு கடையில் ரூ.16 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.
மர்ம ஆசாமிகளை தேடிவருகிறார்கள்
இது குறித்த புகாரின் பேரில் அவினாசி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரி வழக்குபதிவு செய்து நள்ளிரவில் அடுத்தடுத்த மூன்று கடைகளில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் ஒரு கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி சோதனை செய்த போது அதில் சுமார் 35 வயது மதிக்கதக்க பேண்ட், சட்டை தலையில்ஹெல்மெல்ட் அணிந்து வந்த 2 மர்ம ஆசாமிகள் இந்த துணிகர திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. திருட்டு நடந்த அந்த பகுதியில் அடுத்தடுத்து கடைகள், 2 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் மெயின் ரோட்டில் 3 கடைகளின் ஷட்டர் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.